புதன், 20 மே, 2009

தமிழகத்தின் ஒரே பெண் எம்.பி. ஹெலன்!

சென்னை: தமிழகத்தின் தற்போதைய ஒரே மக்களவை பெண் எம்.பி. என்ற பெருமையை கன்னியாகுமரி தொகுதியின் திமுக வெற்றி வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி என்று தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 206 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இந் நிலையில் இதுவரை இல்லாத வகையில் நமது நாடாளுமன்றத்துக்கு அதிகபட்சமாக 58 பெண்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்த முறை தமிழகத்தில் ஒரே ஒரு பெண் எம்.பி. மட்டுமே இருக்கிறார்

மே 13ம் தேதி நடந்த வாக்குப் பதிவில் 48 பெண்கள் தமிழகத்தில் வேட்பாளர்களான இருந்தனர். அவற்றில் பாஜகவை சேர்ந்தவர்கள் மூன்று பேரும், திமுக, அதிமுகவை சேர்ந்த தலா 2, காங்கிரஸ், தேமுதிகவை சேர்ந்த தலா ஒரு பெண்கள் போட்டியிட்டனர். சுயேட்சையாக 26 பெண்களும், மற்ற குட்டி கட்சிகள் சார்பில் 13 பேரும் போட்டியிட்டனர்.

இந் நிலையில் இவர்களில் கன்னியாகுமரி திமுக வேட்பாளரான ஹெலன் டேவிட்சன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காயத்ரி ஸ்ரீதரன் தோல்வியடைந்துள்ளார். அதே போல் அதிமுகவின் பெண் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்

கடந்த முறை தேர்தலில் 24 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் நான்கு பேர் வெற்றி பெற்றனர். அதாவது போட்டியிட்ட 6 பேருக்கு ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இம்முறை 48 பேருக்கு ஒருவர் தான் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து தமிழகத்தின் ஒரே பெண் எம்.பி. என்ற பெருமையுடன் டெல்லி செல்ல இருக்கிறார் ஹெலன் டேவிட்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin