ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, இம் மாதம் 26-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
இப் பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வீசிய சூறாவளிக் காற்றில் முத்தாலங்குறிச்சி, மணக்கரை, கொங்கராயகுறிச்சி, தூதுகுழி, செய்துங்கநல்லூர், கருங்குளம், கால்வாய், புளியங்குளம், தென்திருப்பேரை, ஆதிச்சநல்லூர், கடையநோடை, செம்பூர் உள்பட பல கிராமங்களில் பெருமளவில் வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வியாழக்கிழமை மாவட்ட தலைவர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் முத்துகாந்தாரி, கருங்குளம் மாரியப்பன், ஆழ்வை ஜெயராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் சேதமடைந்த வாழைகளுக்காக விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி, இம்மாதம் 26-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சண்முகையா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக