மன்மோகன்சிங் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்றதும், முதல் பணியாக, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஏழை-நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வரி கட்டமைப்பில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொள்ள மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். அவர் அறிவுறுத்தலின் பேரில், பட்ஜெட் தயாரிப்பு பணிகளை மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வரிச்சீரமைப்பில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று தெரியவந்துள்ளது. தற்போது வருமான வரி உச்சவரம்பு ரூ.1? லட்சமாக உள்ளது. இது ஒரு லட்சத்து 75 ஆயிரமாக உயரும் என்று தெரிகிறது.
பெண்கள் மற்றும் முதியோருக்கு தற்போது வருமான வரி உச்சவரம்பு ரூ.1.75 லட்சமாக உள்ளது. இது 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். நேரடி வரி விதிப்பில் பிரிஞ்ச் பெனிபிட் வரியை விலக்கிக் கொள்ள நிதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இந்த வரிச்சீரமைப்பால் மத்திய அரசுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும் நடுத்தர மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 6-வது சம்பளக்கமிஷன் பரிந்துரைப்படி சம்பளம் உயர்த்தப்பட்டது. அப்போது சம்பள நிலுவைத் தொகையில் 40 சதவீதம் முதல் தவணையாக கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 60 சதவீத தொகையை 2-வது தவணையாக கொடுக்க உள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும்.
வர்த்தக அமைச்சகமும், சில வரி சீரமைப்பு பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. சுங்கவரி, சேவை வரிகளில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல வரிச்சலுகைகளுக்கும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக