அனுமதியின்றி தங்கியதாக அரபு நாட்டு சிறைகளில் 1500 தமிழர்கள் வாடுகின்றனர்.
தமிழர்களின் வெளிநாட்டு மோகம் அவர்களை பல இன்னல்களில் மாட்டி விடுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் பலர் வேலை செய்கிறார்கள்.
இவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து வேறு நிறுவனத்திற்கு செல்லும் போது அரபு நாட்டு சட்டப்படி அவர்களது விசா காலாவதி ஆகிவிடுகிறது.
இந்த வேளையில் அனுமதி இன்றி அந்த நாட்டில் தங்கியதாக அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அங்குள்ள சிறைகளில் அடைக்கப்படும் அவர்கள் போதிய குடிநீர், உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள்.
இவர்களை நம்பி ஊரில் வசிக்கும் பெற்றோர் குடும்பத்தினரும் அவதிப்படுகின்றனர்.
பொதுவாக அரபு நாடுகளில் வேலைக்கு செல்வோர் விசா வழங்கிய உரிமையாளரிடம்தான் வேலை பார்க்க வேண்டும் என்பது சட்டம்.
அந்த நிறுவனத்தினர் ஏதாவது காரணத்தால் பணியை விட்டு நீக்கினாலோ அல்லது கூடுதல் பணம் கிடைக்கும் என்றும் ஓய்வு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வீடுகளை சுத்தம் செய்வது கார் கழுவுவது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும்போதுதான் போலீசில் பிடிபடு கிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த நயினாமுகமது என்பவர் இது போன்று சவூதி அரேபியாவில் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 மாதமாக சிறையில் வாடும் அவர் இருண்ட அறையில் குடிநீர், உணவின்றி அல்லல் படுகிறார். இது பற்றிய தகவல் ஊரில் உள்ள நயினாமுகமதுவின் குடும் பத்தினருக்கு தெரிய வந்தது.
அவர்கள் நயினா முகமதுவை மீட்க கோரி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நெல்லை மாவட்ட செயலாளர் மில்லத் இஸ்மாயில் கூறியதாவது:-
அரபு நாடுகளில் வேலைக்கு சென்ற சுமார் 1500 தமிழர்கள் அங்குள்ள சிறைகளில் வாடுகின்றனர். முஸ்லிம் மட்டுமல்லாத இந்து, கிறிஸ்தவ மதத்தினரும் இதில் அடங்குவர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் இவ்வாறு சிறையில் உள்ளனர்.
கொடுமை தாங்காமலும், குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லையே என்றும் பலர் தற்கொலை செய்துள்ளனர். இது பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் வாடுபவர்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட துணை செயலாளர்கள் பாட்டப்பத்து முகமது அலி, ஐதர் அலி, சங்கை சேனா, திவான், ஹாஜி மசூது ஆகியோர் உடன்
இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக