வியாழன், 23 ஏப்ரல், 2009

பொது வேலை நிறுத்தம்: கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நடைபெறும் சண்டையில் அப்பாவி தமிழர்கள் பலியாகிறார்கள்.

இதனால் அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் நாட்டில் இன்று பொது வேலைநிறுத்தம் நடத்த முதல்-அமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

இதற்கு தி.மு.க. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்தன. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பஸ்கள் ஓடவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க அரசு தயாராக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. அனைத்து பஸ் டெப்போக்களும் மூடப்பட்டன.

சென்னையில் காலையில் இருந்து மாநகர பஸ்கள் ஒன்று கூடஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரவேண்டிய எக்ஸ்பிரஸ் பஸ்கள் முன்கூட்டியே புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தன.

மாநகர பஸ்கள் ஓடாததால் பிராட்வே, தாம்பரம், சென்ட்ரல், பெரம்பூர், அயனாவரம், வடபழனி, தியாகராய நகர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடியது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பெரும்பாலான ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், கார், வேன்கள் மட்டும் ஓடின.

பால் சப்ளை வழக்கம்போல் இருந்தது. குடிநீர் லாரிகள் ஓடின. சரக்கு லாரிகள் குறைந்த அளவில் ஓடியது.

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன ஒரு சில டீக்கடைகள், சிறிய பெட்டிக்கடைகள் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் ஓடின.

வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் அனைத்து தியேட்டர்களிலும் காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. ஸ்டூடியோக்கள் மூடப்பட்டு இருந்தன.

சென்னையில் அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. பஸ்கள் ஓடாததால் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது.

மத்திய அரசு அலுவலகங்கள், பாங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. அவற்றிலும் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது.

சென்னையில் சில கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று பஸ்கள் ஓடாததால் தேர்வு எழுதச் செல்லும் மாணவ -மாணவிகள் ஆட்டோ பிடித்தும், பெற்றோருடன் இரு சக்கர வாகனங்களில் சென்றும் தேர்வு எழுதினர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும். இன்று சுமார் 50 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்தன.

பெரு வாரியான கடைகள் மூடப்பட்டிருந்தது. நேற்று மீதம் இருந்த காய்கறிகளை மட்டும் ஒருசில கடைகளில் திறந்து வியாபாரம் செய்தனர்.

வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அம் பத்தூர் தொழிற்பேட்டையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin