காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோஷமிட்ட வாலிபர் ஒருவர், மரக்கட்டையை தூக்கி எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பெரியார் நகரைச் சேர்ந்த சாயல்ராம் என்கிற ராமு (35) திடீரென எழுந்து இலங்கை பிரச்சனைக்கு முடிவு என்ன, இலங்கை தமிழர்களுக்கு பதில் சொல் என கோஷம் போட்டார்.
மேலும் உலக தமிழர்களின் தலைவன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க என கோஷம் போட்டார். அத்தோடு நில்லாமல், சிதம்பரத்தை நோக்கி மரக் கட்டை ஒன்றையும் வீசினார். ஆனால் அது சிதம்பரம் மீது படவில்லை.
இதை எதிர்பாராத போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சாயல்ராமை வளைத்துப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் சாயல்ராம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவரை மன்னித்து விட்டு விடும்படி ப.சிதம்பரம் போலீஸாரை கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் பிடிபட்ட நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் ப.சிதம்பரம் பேசுகையில், இலங்கையில் அமைதி நீடிக்க வேண்டுமானால், போர் நிறுத்தம் நீடிக்க வேண்டுமானால் இரு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், தேர்தலுக்குப் பின்னர் பாமகவை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் தயங்காது என்றும் சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டாக்டர் ராமதாஸ் தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது இயல்பு. இந்த அவரது கொள்கையை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிற போதிலும் கூட, அவரது மகன் மீண்டும் மத்திய அமைச்சராவதை காங்கிரஸ் தாராளமாக வரவேற்கும் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக