சனி, 11 ஏப்ரல், 2009

நெல்லை, தூத்துக்குடியில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; குற்றாலம், பாபநாசம் அருவிகளில் வெள்ளம்

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை காலைவரை விடிய விடிய பெய்தது. பகலிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. நேற்று இரவு பல இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. கடந்த 2 மாதமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கோடை மழையினால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. தென்காசி குற்றாலத்தில் நேற்று கனமழை பெய்தது.

குற்றாலம் மலையில் இரவு பெய்த மழையினால் அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் இரவு கனமழை பெய்தது. இதனால் பாண தீர்த்தம், அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 66.45 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 67.30அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 849 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இப்பகுதியில் 40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேர்வலார் அணை நீர்மட்டம் நேற்று 79.25 அடியாக இருந்தது. இன்று இதன் நீர்மட்டம் 80.08 அடியாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் 22 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 79.25 அடியாக இருந்தது. இன்று 79. 60 அடியாக உயர்ந்துள்ளது. இங்கு வினாடிக்கு 362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இப்பகுதியில் 48.4 மி.மீ. மழை பெய்தது.
பரவலாக பெய்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் வந்தது.
தூத்துக்குடி பகுதியில் பெய்த கன மழையினால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த உப்பள தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதாக இருந்தனர்.

இந்த நிலையில் கன மழையினால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை. ஏற்கனவே ஸ்டிரைக்கால் பாதிப்படைந்த உப்பள தொழில், மழையால் மேலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இதுவரை உப்பள தொழில் பாதிப்பால் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீடித்தால் மேலும் பல கோடி நஷ்டம் ஏற்படும் என்று உப்பள உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்த மழையினால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மழை காரணமாக அவர்கள் கடலில் நீராட முடியாமல் தவித்தனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை -19

ஆய்க்குடி - 8.4

நாங்குநேரி - 12

பாளை - 25.2

ராதாபுரம் - 15

சங்கரன்கோவில் - 20

செங்கோட்டை - 3

சிவகிரி - 5.2

தென்காசி - 26.2

நெல்லை - 4

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருச்செந்தூர் - 73

காயல்பட்டினம் - 85

குலசை - 56

விளாத்திகுளம் - 11

காடல்குடி - 3

வைப்பார் - 5

கோவில்பட்டி - 12

கயத்தார் - 20

கடம்பூர் - 16

கழுகுமலை - 19

ஓட்டப்பிடாரம் - 13மணியாச்சி - 5

கீழஅரசடி - 14

எட்டயபுரம் - 7

சாத்தான்குளம் -25

ஸ்ரீவைகுண்டம் - 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin