தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மொபைல் பொது தொலைபேசி (மொபைல் பி.சி.ஓ.) வசதி திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது
இது தொடர்பாக தூத்துக்குடி பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அட்சய திருதியை முன்னிட்டு தூத்துக்குடி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பி.சி.ஓ. (மொபைல் பொது தொலைபேசி) வசதியை திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த வசதி மாவட்டம் முழுவதிலும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டின் விலை ரூ. 221. இத்துடன் இந்த கார்டில் ரூ. 50 இலவச டாக்டைம் கிடைக்கும்.
இதற்கான ரீசார்ஜ் கார்டின் விலை ரூ. 5,515. 30 நாள் வேலிடிட்டி உள்ள இந்த ரீசார்ஜ் கார்டில் ரூ. 9,502 வரை பேசலாம். இந்த கார்டை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் 42 சதவிகிதம் நிகர லாபம் அடைய முடியும்.
இந்த கார்டில் இருந்து லோக்கல் மற்றும் எஸ்டிடியில் பேசுவதற்கு நிமிஷத்துக்கு ரூ. 58 காசுகள் வசூலிக்கப்படும். இதன் மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை நாடுகளுக்கு 8 வினாடிகளுக்கு 58 காசுகளும், ஐரோப்பா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, குவைத், துபாய்க்கு பேச 5 வினாடிகளுக்கு 58 காசுகளும், சவூதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு பேச 4 விநாடிகளுக்கு 58 காசுகளும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மொபைல் பி.சி.ஓ.வில் வாடிக்கையாளர்கள் வெளி நாடுகளிலும் பேச வசதியாக "கால் கான்பிரன்ஸ்' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுடன் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, குவைத், துபாய், சவூதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுடனும் கால் கான்பிரன்ஸில் பேசிக் கொள்ளலாம்.
இதற்கான கட்டணம் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்கு நிமிஷத்துக்கு ரூ. 5.51-ம், ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு நிமிஷத்துக்கு ரூ. 9.85-ம் கால் கான்பிரன்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்
இந்த மொபைல் பி.சி.ஓ. கார்டுகள் மாவட்டத்தில் உள்ள எல்லா பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், பிஎஸ்என்எல் பிரான்சைஸிகளிடமும் மற்றும் பிஎஸ்என்எல் விற்பனைப் பிரதிநிதிகளிடமும் கிடைக்கும்.
செல்போன் சிம்கார்டு விற்பனையில் தமிழ்நாடு வட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடந்த நிதியாண்டில் 2-ம் இடம் பிடித்து பரிசு வென்றுள்ளது. இதேபோல, மின் சிக்கனத்தில் தமிழ்நாடு வட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை சேவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அகண்ட சேவை இணைப்பு பெற மோடம் இலவசமாக வழங்கப்படும். மாத வாடகையும் ரூ. 99 மட்டுமே. இந்த வசதி மாவட்டத்தில் 40 தொலைபேசி நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, துணைப் பொது மேலாளர் தாமஸ், உதவிப் பொது மேலாளர் டேவிட் செல்வராஜ், உதவி கோட்டப் பொறியாளர் (விற்பனை) ஐ. லிங்கபாஸ்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மொபைல் பி.சி.ஓ. வசதிக்கான சிம்கார்டு விற்பனையை பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் தொடங்கிவைத்தார். முதல் கார்டை காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரகமத்துல்லா பெற்றுக் கொண்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக