உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் மலையேற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, செல்போன்களில் பேசுவதற்கு தேவையான வசதியை நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் உடையது.இங்கு மலையேற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் சிகரத்தை அடைந்தாலும், அங்கு போதிய டவர்கள் இல்லாத காரணத்தால் செல்போன்களை பயன்படுத்த முடியாது நிலை தற்போது உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு எவரெஸ்ட் சிகரத்தில் 5,160 மீட்டர் உயரத்தில் உள்ள கோரக் ஷெப் பகுதியில் செயற்கைக்கோள் ஆண்டனா-வை நிறுவ நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக உள்ளூர் இணையதளத்திற்கு அந்நிறுவனத்தின் தலைவர் அனூப் ரஞ்சன் அளித்துள்ள பேட்டியில், செயற்கைக்கோள் ஆண்டனா நிறுவும் பணி ஜூன் மாதத்தின் மத்தியில் நிறைவுபெறும்.
இதன் பின்னர் ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ தொழில்நுட்பம் கொண்ட மொபைல்போன்களை எவரஸ்ட் சிகரத்தில் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.புதிதாக நிறுவப்பட உள்ள செயற்கைக்கோள் ஆண்டனா, சுமார் 3 ஆயிரம் அழைப்புகளை ஒரே நேரத்தில் கையாளக் கூடியது. சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தற்போது செயற்கைக்கோள் தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக