நாடாளுமன்றத் தேர்தலையொட்டி லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 34.9 சதவீத ஆதரவும், திமுக கூட்டணிக்கு 34.5 சதவீத ஆதரவுமாக, இரு அணிகளும் வெறும் 0.4 சதவீத வித்தியாசத்தில் சம பலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 8.33 சதவீத வாக்குகள் பெற்ற விஜய்காந்தின் தேமுதிகவுக்கு 12.3 சதவீத மக்களின் ஆதரவு இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதிமுகவுக்கு தனியாக 27.3 சதவீத மக்கள் ஆதரவும் திமுகவுக்கு தனியாக 26.5 சதவீத ஆதரவும் உள்ளது.
அதிமுக கூட்டணி கட்சிகளின் பலம்:
அதிமுக தனியாக 27.3 சதவீத மக்கள் ஆதரவையும், திமுக தனியாக 26.5 சதவீத மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளன.
அதிமுக அணியில் பாமகவுக்கு 3 சதவீத மக்கள் ஆதரவும், மதிமுகவுக்கு 2.4 சதவீதமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1.2 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 சதவீதமும் மக்கள் ஆதரவு உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளின் பலம்:
திமுக அணியில் காங்கிரசுக்கு 6.4 சதவீத ஆதரவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1.2 சதவீதமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.4 சதவீதமும் மக்கள் ஆதரவு உள்ளது.
பாஜகவுக்கு 3.1 சதவீத ஆதரவு உள்ளது. அந்த அணியில் சரத்குமாரின் கட்சி இடம் பெற்றால் அவர்களுக்கு 0.4 சதவீத மக்கள் ஆதரவு கிடைக்கும்
முடிவு செய்யப் போகும் 13.1% நடுநிலையாளர்கள்:
மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு 1.7 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், 13.1 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்கவில்லை என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இதனால் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போவது இதுவரை யாருக்கு வாக்கு என முடிவெடு்க்காத இந்த நடுநிலையாளர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது
திமுக ஆட்சி: திருப்தி-47.5%, அதிருப்தி-44.6%:
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சி திருப்தி அளிப்பதாக 47.5 சதவீதம் பேரும் அதிருப்தி அளிப்பதாக 44.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் தலைமையிலான 5 ஆண்டுகால மத்திய ஆட்சி திருப்தி அளிப்பதாக 43.3 சதவீத்தினரும், அதிருப்தி அளிப்பதாக 42.2 சதவீத்தினரும் கூறியுள்ளனர்
இலங்கையே முக்கிய பிரச்சனை:
தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனைதான் இந்த தேர்தலில் முதலிடம் பெற்றுள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இலங்கை பிரச்சனை தான் முக்கிய பிரச்சனை என்று 28.8 சதவீதம் பேரும், விலைவாசி உயர்வு தான் முக்கிய பிரச்சனை என்று 23.7 சதவீதம் பேரும், மற்ற பிரச்சனைகள் எல்லாம் அடுத்தபட்சம்தான் என்றும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதில் மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக மக்கள் கருதுகின்றனர்.தேசிய அளவில் விலைவாசி உயர்வுதான் முக்கிய பிரச்சனை என்று 24.1 சதவீதம் பேரும், தீவிரவாதம் தான் முக்கிய பிரச்சனை என்று 24.4 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சட்டம், ஒழுங்கு-அதிமுக பெஸ்ட்:
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 5 பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பு, மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளை அதிமுக அணி வெற்றி பெற்றால்தான் தீர்க்க முடியும் என்றும்,
வேலைவாய்ப்பு-திமுக பெஸ்ட்:
வேலையில்லாத் திண்டாட்டத்தை மட்டுமே திமுக அணியால் தீர்க்க முடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
'திருமங்கலம் மாதிரி கவனிக்கனும்'..
திருமங்கலம் தேர்தலை போல, தாங்கள் நன்கு ‘கவனிக்க’ப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான வாக்காளர்களிடம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
எனவே அந்த 'எதிர்பார்ப்பை' எந்தக் கட்சி நிறைவேற்றுகிறதோ அவர்களுக்கும், இலங்கை பிரச்சனையை கையாளும் முறையுமே வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கப் போகிறது.
இவ்வாறு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.ராஜநாயகம் தலைமையிலான இந்த டீம் கடந்த பல தேர்தல்களில் முடிவுகளை ஓரளவுக்குத் துல்லியமாக கணித்துக் காட்டிய வெற்றிக் குழு என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக