லோக்சபாவுக்கு, வரும் 16ம் தேதி முதல் கட்டமாக நடக்கும் தேர்தலில் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், 193 பேர் கோடீஸ்வரர்கள்; 222 பேர் கிரிமினல்கள். அத்துடன் முழுமையான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளனர்
லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது. 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலில் மொத்தம் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 222 பேர் கிரிமினல்கள். அதில், 51 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் கிரிமினல்களே.போட்டியிடும் 222 கிரிமினல்களில், 24 பேர் காங்கிரஸ் கட்சியையும், 23 பேர் பா.ஜ., 17 பேர் பகுஜன் சமாஜ், 10 பேர் சமாஜ்வாடி, எட்டுப் பேர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஏழு பேர் ஐக்கிய ஜனதா தளம், ஐந்து பேர் தெலுங்கு தேசம், ஏழு பேர் ராஷ்டிரிய ஜனதா தளம், இரண்டு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இரண்டு பேர் தேசியவாத காங்கிரஸ், ஆறு பேர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியையும் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.கொலை, கொள்ளை, பணம் பறிப்பு, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என, பல்வேறு விதமான குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு உண்டு. இந்த கிரிமினல்களுக்கு எதிராக 571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 306 வழக்குகள் கொடூரமான குற்றங்கள் தொடர்பானவை.அதிகம்: அதே நேரத்தில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 14 சதவீதம் பேர் அதாவது 193 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த லோக்சபா தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 9 சதவீதம் அதிகம். காங்கிரஸ் சார்பில் 45 கோடீஸ்வரர்களும், பா.ஜ., சார்பில் 30, பகுஜன் சமாஜ் சார்பில் 22 கோடீஸ்வர்களும் போட்டியிடுகின்றனர். மற்றவர்கள் இதர கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 68 சதவீதம் பேர் தங்களின் வருமானம் குறித்த முழு விவரம் தராதவர்கள். தேர்தலில் போட்டியிடுவோர் தங்களின் சொத்து விவரங்களோடு, 'பான்' கார்டு மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. இருந்தாலும், 68 சதவீதம் பேர் அதை செய்யவில்லை.
மேலும், மொத்த வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் ஆண்கள், 7 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். 60 சதவீதம் பேர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் அல்லது டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரே தொகுதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரிமினல் வேட்பாளர்கள் போட்டியிட்டால், அந்த தொகுதி 'ரெட் ஹாட்' என, அழைக்கப்படுகிறது. இதன்படி, தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் 38 தொகுதிகள், 'ரெட் ஹாட்' என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.பீகாரில் முதல் கட்ட தேர்தலில் 200 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
இவர்களில் 26 சதவீதம் பேர், அதாவது 51 பேர் கிரிமினல்கள். ஜார்க்கண்டில் போட்டியிடும் 79 பேரில் 17 பேரும், மகாராஷ்டிராவில் போட்டியிடும் 242 பேரில் 42 பேரும், உ.பி.,யில் போட்டியிடும் 268 பேரில் 46 பேரும் கிரிமினல்கள்.நாடு முழுவதும் 1,200 அரசு சார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரசாரம் மேற்கொண்டு வரும், 'நேஷனல் எலக்ஷன் வாட்ச்' என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன
தகவல் உதவி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக