வெள்ளி, 6 மார்ச், 2009

விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் : சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இரு இஸ்லாமியர்கள் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியிருப்பதாக திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்த மகராஜ் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் குந்துகாலில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சென்று விட்டு திரும்பும் போது குந்துகாலில் சுவாமி விவேகானந்தர் வந்திறங்கிய துறைமுக கட்டடம் தற்போது நினைவு மண்டபமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத்.சுவாமி சதானந்த மகராஜ் பேசியதாவது:

இந்நினைவு மண்டபத்தை அமைக்க மத்திய அரசு ரூ.47 லட்சம் வழங்கியிருக்கிறது. மேலும் பலரின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி வரை நன்கொடை பெற்று அழகு நிறைந்த நினைவு மண்டபமாக மாற்றி இருக்கிறோம். இங்கு தற்போதுள்ள சுவாமி விவேகானந்தரின் கற்சிலை அகற்றப்பட்டு வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும். இங்கு சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளது மிகுந்த பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார். தானமாக இடம் வழங்கிய மண்டபத்தைச் சேர்ந்த எம்.ஷாஜகான் மரைக்காயர், கே.ஏ.ரகுமான் மரைக்காயர் ஆகியோருக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்.

பின்னர் கே.எம்.ரகுமான் மரைக்காயர் பேசியதாவது: அனைத்து மக்களும் சகோதர உணர்வோடும், மிகுந்த ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இடத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம். இன்னும் கேட்டாலும் கொடுக்க காத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தேவை ஒற்றுமை தான் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin