திங்கள், 2 நவம்பர், 2009

நோக்கியா நிறுவனத்தில் சேர பிளஸ்-2 படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ. 4400 மற்றும் இலவச உணவுடன் ரூ. 10000-க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ. சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்.

வங்கி எழுத்தர் பணி: பெண்களுக்கு இலவசப் பயிற்சி


பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர்கள் பணிக்கான தேர்வு குறித்த மூன்று நாள் இலவசப் பயிற்சி பெண்களுக்கு வியாழக்கிழமை (நவ. 5) முதல் தொடங்கவுள்ளது.

11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் உள்ள இத்தேர்வு நவம்பர் 8 - ம் தேதி நடைபெறவுள்ளது.

"சக்ஸஸ் ஸ்கூல் ஆஃப் பாங்கிங்' என்ற நிறுவனம் இந்த இலவசப் பயிற்சியை நடத்துகிறது.

இதில் வேத கணித நுட்பங்கள் மூலம் கணிதக் கேள்விகளுக்கு துரித மற்றும் எளிதான தீர்வுகள், ஆங்கில இலக்கணம் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை எழும்பூரில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டு நகலுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 92822 33333, 93848 44405

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை (நவ. 2) தொடங்கி, செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.

சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர் மழை பெய்துத்தது

ஸ்ரீவைகுண்டம் தாலுகா மற்றும் ஏரல் பகுதியில் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அதிக அளவில் வாழை, நெல் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை சீரான பருவமழை இல்லாததாலும், விவசாய பயிர்களுக்கு போதிய விலை இல்லாததாலும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை ஓரங்கட்டிவிட்டனர்.

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவில் பருவமழை பெய்த்தாலும் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைத்தாலும் விவசாயிகள் ஓரளவு செழிப்படைந்தனர்.

இதனால் நெல், வாழை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள் மீண்டும் விவசாயத்தில் மும்முரமாக இறங்கியுள்ளனர். பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அதை மீறி தற்போது நல்ல நிலையில் விவசாயம் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில்தான் அதிக அளவு விவசாயம் நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை முற்றிலும் ஏமாற்றி விட்டது. இதனால் பல இடங்களில் வாழை, உளுந்து பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது. கோடை மழைதான் இல்லை. பருவமழை காலத்தில் பெய்யும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பருவமழை தாமதத்தால் விவசாயிகள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் திடீரென பருவமழை தொடங்கிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழை துவங்கியதால் முதற்கட்டமாக உழவு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு வரை தற்போதைய கால கட்டத்தில் குளங்களுக்கு தண்ணீர் பெருகி இருந்ததால் விவசாய பணிகள் மும்முரமாக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு மழையின் தாமதத்தால் விவசாய பணிகள் தாமதமானாலும் இந்த ஆண்டும் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். தொடர்ந்து போதிய அளவு பருவமழை பெய்து விவசாயிகளை தொடர் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது இயற்கையின் கையில்தான் உள்ளது.

ஞாயிறு, 1 நவம்பர், 2009

விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு!


மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றுள்ள இயங்கு மென்பொருளான விண்டோஸ் 7யை உருவாக்கியதில் ஒரு தமிழ் கணிப்பொறியாளர் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு.

குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர் என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர்.

இவரது தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள். அண்மையில் அறிமுகமான விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான்.

இவரைத் தவிர, மும்பையின் அமித் மிட்டல், கான்பூரின் அமிதாப் ஸ்ரீவத்சவா, சண்டிகரைச் சேர்ந்த குர்தீப் சிங் பால், ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்ய நடெல்லா மற்றும் டெல்லியைச் சேர்ந்த அனூப் குப்தா ஆகியோர் முக்கிய பொறுப்பு வகிக்கும் மற்ற இந்தியர்கள்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஹோட்டல்கள், டீக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தும் ஹோட்டல்கள், டீக்கடைகளில் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

பாரத் பெட்ரோலிய மேலாளர் தனபால் உத்திரவின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ரவிந்திரா, விற்பனை மேனேஜர் சண்முகராஜ் குழுவினர் அடங்கிய அதிகாரிகள் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு முறைகேடாக உபயோகப்படுத்தும் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டது.

கடைக்காரர்கள் கமர்சியல் சிலிண்டரான 19 கிலோ எடை சிலிண்டரை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டனர். வீட்டு உபயோக மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி வியாபாரம் செய்வதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தனர்.

ஸ்ரீவையில் ., சிவில் சப்ளை ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

ஸ்ரீவைகுண்டம் சிவில் சப்ளை ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் கணக்கில் வராத 9ஆயிரத்து 100ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் உள்ள சிவில் சப்பளை பிரிவில் லஞ்சபணம் கைமாறுவதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி லஞ்சஒழிப்பு டிஎஸ்பி ரெங்கசாமி,இன்ஸ்பெக்டர்கள் எடிசன்,ராஜ் மற்றும் தளவாய் முத்துஜான், பாண்டி, சீத்தாராமன்,வேல்குமார் தலைமையிலான போலீசார் தாலுகா ஆபிசில் செயல்பட்டு வரும் சிவில்சப்ளை பிரிவில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

இதில் மேஜைகள், குப்பைத்தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் ரூ.9ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. இது கணக்கில் வராத பணம் என்று போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வட்டார வழங்கல் அலுவலர் சங்கரன்நாரயணன், ஆர்.ஐ.,க்கள் ஜெயக்குமார், சுல்தான், உதவியாளர்கள் சிவபெருமாள், முகைதீன் பிச்சை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் 5 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

LinkWithin

Blog Widget by LinkWithin