சனி, 13 ஜூன், 2009

நெல்லையில் ஜூன் 20-ல் பொருள்காட்சி தொடக்கம்


திருநெல்வேலி பொருள்காட்சி மைதானத்தில் இம் மாதம் 20-ம் தேதி தொடங்கி, 45 நாள்கள் நடைபெற உள்ள அரசுப் பொருள்காட்சிக்கான ஏற்பாடுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில், மாநில சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த பொருள்காட்சியில் சுமார் அரசுத் துறைகளின் சார்பில் 20 அரங்குகள் இடம்பெறும். இவை அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்படும்.

பொருள்காட்சியில் தனியார் கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும்.

இந்நிலையில் முனைப்புடன் நடைபெற்று வரும் அரசுத் துறை அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வியாழக்கிழமை மாலை பார்வையிட்டார்.

அவருடன் மாநகராட்சி ஆணையர் த. மோகன், மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.

பொருள்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவும், செயற்கை நீரூற்றுகளை அமைக்கவும் மாநகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடக்க விழா: பொருள்காட்சி தொடக்க விழா இம் மாதம் 20-ம் தேதி சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற உள்ளது.

பொருள்காட்சியை மாநில செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடக்கிவைத்துப் பேசுவார்.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் வாழ்த்திப் பேசுவர்.

பொருள்காட்சி குறித்து செய்தி - மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. காமராஜ் விளக்கிப் பேசுவார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் வரவேற்றுப் பேசுவார்.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன், எஸ். ராமசுப்பு எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், என். மாலைராஜா ஆகியோர் முன்னிலை வகிப்பர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin