வெள்ளி, 16 செப்டம்பர், 2011

59 ஆயிரம் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க திட்டம்; கலெக்டர் ஆஷிஷ்குமார் தகவல்


தூத்துக்குடி, செப்.13-

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆஷிஷ்குமார் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் விவசாயிகளுக்கு ஆடு&மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்திற்கு 1,200 பேரும், இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்திற்கு 100 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டு 59 ஆயிரம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவும், 13 ஆயிரத்து 611 மாணவர்களுக்கு லேப்&டாப் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகாலில் இருந்து 600 கனஅடி தண்ணீரும், தென்காலில் இருந்து 100-150 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 2 மோட்டார்கள் மூலம் 30 முதல் 35 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மீனவர் பிரச்சினைகள் ஓர் இரு நாளில் தீர்க்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

தொடர்ந்து இந்திராகாந்தி தேசிய விதவை உதவிதொகை ஆயிரம் வீதம் 18 பேருக்கும், முதியோர் உதவி தொகை 40 பேருக்கும், முதல்&அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 ஆயிரம் நிதிஉதவியை என்ஜினீயர் பயிலும் 3 மாணவ-மாணவிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவியாக தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் 4 பேருக்கும், திருமண உதவியாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் சாதனை படைத்த 12 மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணிக்கும் அரசு பஸ் : கலெக்டரிடம் புகார்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்வதால் மக்கள் பரிதவித்து கொண்டிருப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் முக்கியமான ஊராகும். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசு, தனியார் பணி நிமித்தமாக நெல்லைக்கு செல்கின்றனர். நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, கலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு படிக்க செல்கின்றனர்.

இதே போல் இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பணிக்கு ஒன்று நெல்லைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடிக்கு வர வேண்டும். திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் அப்படியே மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன.

இதனால் இந்த பகுதி மக்கள் தினமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் இயங்கும் அரசு பஸ்களை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

LinkWithin

Blog Widget by LinkWithin