புதன், 6 மே, 2009

தமிழக தபால் நிலையங்களில் தங்க நாணய விற்பனையில் நெல்லைக்கு 2-வது இடம்


தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில்தங்க நாணயங்கள் விற்பனையில் நெல்லை 2-வது இடம் பிடித்துள்ளது. தபால் நிலையங்களில் தங்க நாணய விற்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 60 தபால் நிலையங்களில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அரை கிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் எடைகளில் விற்பனை செய்யப்படும் இந்த நாணயங்களை பொதுமக்களில் பலர் ஆர்வ முடன் வாங்கி வருகின்றனர். மார்ச் மாதம் மொத்த விற்பனையில் தமிழக அளவில் நாகர்கோவில் முதலிடத்தையும், நெல்லை 2-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.

தேசிய அளவில் தங்க நாணய விற்பனையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை தபால் நிலையத்தில் சராசரியாக தினமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இந்த நாணயங்கள் விற்பனையாகின்றன.

அட்சய திருதியை தினத்தில் மட்டும் நெல்லை மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் ரூ.2 1/2 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் விற்பனையாகியுள்ளன.

பொதுமக்களின் வர வேற்பை தொடர்ந்து தங்க நாணய விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகை திட்டங்களை தபால் துறை அறிவித்துள்ளது.

10 கிராம் தங்க நாணயம் வாங்கினால் அரை கிராம் தங்க நாணயம் இலவசம் என்ற திட்டம் வருகிற 14-ந்தேதிவரை செயல் படுத்தப்படுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குலுக்கல் பரிசு திட்டத்தின் கீழ் முதல் 5 இடங்களை பெறுபவர்கள் இலவச சுற்றுலாவாக சுவிட்சர்லாந்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 2-வது இடம் பிடிப்பவருக்கு 100 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பாளை மண்டல தபால் நிலையம் மற்றும் அம்பையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்த தபால் துறை உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin