அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்!
எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ.யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்பெலண்டர் பிளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையே பேர்!
படித்தவர்கள்தான் என்றாலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறை கல்விபெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள் நகரங்களில் தடுமாறித்தான் போகின்றனர். 21 வயதில் யு.ஜி. டிகிரி முடித்து வேலைதேடி வரும் அவர்கள், டெலி மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப், பி.பி.ஓ., என மெதுவாய் மேலே ஏறி ஒரு நிலையை எட்டுவதற்குள் முன் நெற்றியில் முடி கொட்டிவிடுகிறது. இளமையின் எந்த சுகங்களையும் அனுபவித்திடாத முதல் தலைமுறை இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்!
‘‘காலேஜ் முடிச்சதும் கஷ்டமோ, நஷ்டமோ... எல்லா பசங்களையும் போல ரெண்டு வருஷம் ஜாலியா ஊரைச் சுத்தியிருக்கனுன்டா... அந்ததந்த வயசுல அப்படியப்படி இருந்திரனும். குடும்ப நிலைமைன்னு வேலைக்கு வந்தோம். எட்டு வருஷமாச்சு... நிமிர்ந்துப் பார்த்தா சுத்தியிருக்குறப் பசங்கல்லாம் ‘அண்ணா’ன்னு கூப்பிடுறான். நமக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகுது. என்னைக்காச்சும் ஒரு பொண்ணு ‘அண்ணா’ன்னோ, ‘அங்கிள்’னோ கூப்பிட்டுருமோன்னுதான் பயமா இருக்கு.’’ என சிரிப்பவனின் பெயர் பிரவீன். தி.நகர் ‘முருகன் இட்லி கடை’ வாசலிலோ, சரவண பவன் வாசலிலோ பார்த்திருக்கக்கூடும். தடித்தடியாய் டிக்ஸ்னரி விற்றுகொண்டிருப்பான்.
இப்போது டி.என்.பி.எஸ்.ஸி. குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு நடக்கவிருப்பதால் 4000 கேள்வி, பதில்களை ஆடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்து அதை சி.டி.யில் போட்டு 50 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறான். ‘‘ப்ளூடூத் வழியா செல்போன்ல ஏத்திக்கிட்டா ஃப்ரீயா இருக்கும்போது எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் சார். நீங்க படிக்கவே வேண்டியது இல்லை, ஜஸ்ட் கேட்டா போதும்!’’ தெருவோரம் நின்று இப்படி கூவி விற்பதில் அவனுக்கு எந்த வெட்கமும் இல்லை. கேட்டால், ‘‘இருந்துச்சு. இப்போ இல்லை’’ என்பான். மாதம் பிறந்தால் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. மூன்று இருக்கிறது பிரவீனுக்கு.
இப்படிப்பட்ட பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்வி கதை இருக்கும். அதற்குக் காரணம் குடும்பமாய் இருக்கும். ‘குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பதல்ல... குடும்பத்தின் நிலையறிந்து அவர்களே தான் மனம் விரும்பியப் பெண்ணிடம் காதலைச் சொல்வது இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாய் சொல்வதில்லை. காரணம், ‘ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது. இணை, இணையாய் சுற்றுபவர்களைக் காட்டிலும், இப்படி மனதுக்குள் கருகிப்போனக் காதல்களோடு, வேலை முடிந்த பின்னிரவில் முகமறியா பெண்களுடன் காதலும், காமமுமாய் பேசித் திரியும் ஆண்கள்தான் எத்தனை, எத்தனை பேர்?! 30 வயதில்தான் இத்தகைய நிலை என்றில்லை. 24, 25 வயதில் லட்சியங்கள், ஆசைகள் ஒதுக்கிவைத்து, சொந்த சுமைகளை இறக்கி வைப்பதற்காய் உழைப்பவர்கள் பலபேர். நிமிர்ந்து பார்க்கும் நேரத்தில், ஒரு பறவையைப் போல இளமை அவர்களை கடந்துவிட்டிருக்கிறது!
ஆண்கள் குடும்பத்தைப் பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு பன்னெடுங்காலமாய் உண்டு. நண்பர்களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகப்பட்சம் இரண்டாவது பியரில் ‘ஒரு மேட்டர் மச்சான்’ என சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண்களேதான். சினிமாவில் சித்தரிப்பதுப் போல, பெண்கள் அல்ல! ஆனால் குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம், தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்கின்றனர்.
மேன்ஷன் போன்ற இடங்களில் ஆண்களின் உலகத்தை மேலும் நெருக்கமாக அறியலாம். ஏதேதோ திசையில் இருந்து ஓர் அறையில் அறிமுகமின்றி வந்து தங்கும் இளைஞர்களுக்கு இடையேயான நட்பின் அடர்த்தி கூடக், குறைய இருக்கலாம். ஆனால் யார் ஒருவரும் மற்றவர்களை சாப்பிடாமல் தூங்க விடுவது இல்லை. மாசக் கடைசியில் கூட, ‘‘உனக்கு இதே வேலையாப் போச்சுடா’’ எனத் திட்டிக்கொண்டேயாவது ஒரு முட்டை பரோட்டா பார்சல் வாங்குவந்துவிடுவார்கள். இப்போது நிறைய ஐ.டி. இளைஞர்கள் இரவையும், பகலையும் கடந்து வேலைப் பார்க்கின்றனர். அதிக சம்பளம், அதை அவர்கள் செலவழிக்கும் விதத்தால் வீட்டு வாடகை உயர்வு.. போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம். ஆனால் அவர்களை வீடும், உறவும் உண்மையில் பணம் காய்க்கும் எந்திரமாக அல்லவா பார்க்கின்றன? எல்லோருக்கும் இதைப் பொருத்த முடியாது எனினும் நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். ஐ.டி. இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறை வீட்டுக்கும், உறவுகளுக்கும் கலாசார ரீதியாய் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தாலும் அவர்கள் ஈட்டும் அதிகப்பணமே அதற்கான அங்கீரமாய் மாறுகிறது.
ஆனால், ஐ.டி. வேலை எல்லோருக்கும் கிடைப்பது இல்லையே?! தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் உரக்கப் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரிப் படித்துவிட்டு வந்தார்கள்? ‘இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச்சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தினவாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்களால் நிறைந்தது. ‘‘உன் வீட்டுக்காரர் எங்க வேலைப் பார்க்குறார்?’’ எனக் கேட்டால் அவர்களின் மனைவிமார்கள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர்கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாய் தலையசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.
கிருஷ்ணகுமார் என்ற நண்பருக்கு 35-ஐ தாண்டிய வயது இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து தினமும் சென்னை வடபழனிக்கு வேலைக்கு வருகிறார். வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள், அங்கிருந்து கிண்டி வரை மின்சார ரயில், கிண்டி டூ வடபழனி நகரப் பேருந்து்... மாலை வீடு திரும்புகையில் இதே சுற்று பஸ்-டிரெயின்-சைக்கிள் என்பதாய் முடியும். காலை ஆறு மணிக்கு கிளம்பினால் வீடு திரும்ப எட்டு, ஒன்பது ஆகும். ஓர் உழைக்கும் எந்திரமாய் மாறிப்போயிருந்தார். அலுவலகம் பக்கம் இருக்கும் டீ கடையில் இஞ்சி போட்ட ஸ்பெஷல் டீதான் குடிக்கும்படியாய் இருக்கும். சாதா டீ வாயில் வைக்க முடியாது. ஆனால் சாதா டீயை விட ஸ்பெஷல் டீ 2 ரூபாய் அதிகம். கிருஷ்ணகுமார் ஒருநாளும் ஸ்பெஷல் டீ குடித்தவர் இல்லை.
டிராஃபிக் அதிகமாகி இருந்த நாள் ஒன்றில் என் வண்டியில் கிண்டி வரை வந்தார். தனக்கு ஒரே ஒரு தங்கை எனவும் அவளை திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கடுமையான பிரச்னை எனவும் சொன்னார். நான் அதிகம் கேட்கவில்லை. ‘‘ரொம்ப பிரச்னையாயிடுச்சு சார். வேற வழியில்லாம டைவர்ஸ் வாங்கினோம். ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு இப்போதான் இன்னொரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சேன்!’’ என்றவரிடம் பெரிய ஆசுவாசம் தெரிந்தது. இந்த வயதில்தான் அவர் குடும்ப பொறுப்புகளில் இருந்து விடுதலை ஆகியிருக்கிறார். ‘‘நீங்க எதுவாச்சும் ஆகனும்னு ஆசைப்பட்டீங்களா?’’ என்றேன். சிரித்தார். ‘‘ஆசைக்கு என்ன சார், இப்போ கூட பட்டுக்க வேண்டியதான். ஆசைதானே?!’’
உண்மையில் வரதட்சணை, வீண் ஆடம்பரம், நகைகளை வாங்கிச் சேர்ப்பது போன்றவை ஆண்களை நசுக்கிப் பிழிகிறது. அதற்கேற்ற வகையில் சம்பாதிக்க முடியாமல் போனால், வாழவே தகுதியில்லையோ என அவர்களைக் குற்றவுணர்வு அடைய வைக்கும் அளவில்தான் இருக்கிறது சூழல். நமது மோசமான குடும்ப அமைப்பு உறவுகளாலும், அதைவிட அதிகமாய் பணத்தாலும் பின்னப்பட்டிருக்கிறது. அந்த பாரத்தை ஆண்கள் விருப்பப்பட்டு அல்ல, வருத்தப்பட்டே சுமக்கின்றனர். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், ஊர் மெச்சும் வாழ்வு.. இவை எல்லாம் தர முடியாத ஆண் தரக்குறைவானவன் என பொதுப்புத்தி நினைப்பது மட்டுமல்ல, அதுதான் குடும்ப உறுப்பினர்களின் எண்ணமும் கூட. கிடைக்கும் வேலையை சரியாக செய்து, வரும் வருமானத்தில் திருப்தியுடன் வாழ்வதை யாரும் விரும்புவதும் இல்லை, பரிந்துரைப்பதும் இல்லை.
ஆண் துயரத்தின் அதிகப்பட்ச வெளிப்பாடாய் வெளிநாட்டில் பணிபுரிபவர்களைக் குறிப்பிடலாம். ஊரில் நிலத்தை, நகைகளை அடகுவைத்து ஏஜெண்டிடம் பணம் கட்டி சிங்கப்பூரிலும், வளைகுடா நாடுகளிடமும் ஆண்டாண்டு காலமாய் வேலைப் பார்ப்பவர்கள் லட்சங்களைத் தாண்டுவார்கள். முதல் இரண்டு வருடம் பணிபுரிந்து, வெளிநாடு செல்வதற்கு வாங்கிய கடனை அடைப்பார்கள். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து கோடாலி தைலமும், செண்ட் பாட்டிலும் பரிசளித்துவிட்டு மறுபடியும் பிளைட் பிடித்தால், அடுத்த இரண்டு வருட வருமானம் வீடு கட்டவே போதாது. அப்புறம் தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம் என முடித்து நிமிரும்போது அப்போதுதான் உள்ளூரில் நல்ல விலைக்கு நிலம் விலைக்கு வரும். கடன் வாங்கி அதை வாங்கிவிட்டு கடல் கடந்தால், அதற்கோர் இரண்டு வருடம். இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து திருமணம் முடித்து தாம்பத்தியம் நடத்தி வெளிநாடுப் போனால், சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கையில் முகத்தோல் தடித்து, கன்னக்கதுப்புகளில் முதிர்ச்சி படிந்திருக்கும். வயதின் முதுமையுடன் பெற்றோரும், கையில் குழந்தையுடன் மனைவியும்... மிச்ச வாழ்க்கை அவ்வாறாக கழியும்.
இவை எவற்றையும் பாரமாகவும், துக்கமாகவும் எந்த ஆணும் நினைப்பது இல்லை. வாழ்வின் ஒரு பகுதியாகவே இவையும் கடந்து செல்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆணை விமர்சிக்கவும், ஒதுக்கித் தள்ளவுமான கருவியாக எல்லோரும் கைகொள்வது அவனது ஒழுக்கத்தை. குறிப்பாக ‘சாராயம் குடிக்கின்றனர், சிகரெட் பிடிக்கின்றனர்’ என்பது. உண்மையில் இவை உடல்நலம் கெடுக்கும் தவறான பழக்கங்களே. ஆனால் சமூகத்தில் ஓர் ஆணின் நல்மதிப்பை அளவிட இவற்றை அளவுகோல்களாக கருத முடியாது. காஞ்சிபுரத்தில் இறைவன் சந்நிதியில் பெண்களுடன் சல்லாபம் நடத்திய தேவநாதனுக்கு சாராயம், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லை. ஊரே சிரிக்கும் நித்தியானந்தாவுக்கு டீ குடிக்கும் பழக்கம் கூட இல்லையாம். இந்த ஆண்களின் சமூக மதிப்பை எப்படி வரையறுப்பது? 1,500 கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த ‘சத்யம்’ முதலாளி ராமலிங்க ராஜுவுக்கு சாராயம், சிகரெட், பெண் சகவாசம் எதுவும் இல்லை எனில், நல்லவர் என அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஆண்களை Victim-களாக சித்தரித்து அவர்களின் ஆதிக்கத்தன்மையை நியாயப்படுத்துவது அல்ல இக்கட்டுரையின் நோக்கம். மேற்சொன்ன ஆண் துயரங்கள் போன்றவை இன்னும் அதிக விழுக்காட்டில் பெண்களுக்கும் உண்டு. ஆணின் உலகை இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் புரிந்துகொள்வோம் என்பதே இந்த குரலின் அடிநாதம்!
- பாரதி தம்பி
(இது 23.02.2011 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை. படிக்காதவர்கள் படிக்கவும், ஓர் உரையாடலுக்காகவும் இங்கே...)
இந்த கட்டுரை திரு. பாரதி தம்பி என்ற நண்பரின் facebook ல் இருத்து எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக