புதன், 2 பிப்ரவரி, 2011

பேட்மாநகரம் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


காங்., எம்.பி., கல்குவாரியை மூடக்கோரி, பேட்மாநகரம் பகுதி பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.


ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பேட்மாநகரம் அருகே கல்குவாரிகள் உள்ளது. அங்கு வெடிக்கும் வெடி சத்தத்தால் பேட்மாநகரத்தில் உள்ள கட்டடங்கள், பள்ளிகள், மசூதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல், சுவர்களில் கீறல்கள் விழுந்து, மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே கல்குவாரிகளை தடை செய்யக்கோரி, பேட்மாநகரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த பேராட்டத்திற்கு பேட்மாநகரம் ஜமாத் தலைவர் பீர் முகமது, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மா.கம்யூ. செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பூர் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன், மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை வலியுறுத்தி பேசினர்.


உண்ணாவிரத போராட்டத்தில், பேட்மாநகரத்தில் பெரியோர்கள், குழந்தைகள் நிம்மதியாக தூங்கவும், இருதயம், கண் நோய் வராமல் பாதுகாக்கவும், விவசாயம் கால்நடைகள் வன விலங்குகளை பாதுகாத்திடவும், கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில்பேட்மாநகரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மா.கம்யூ.,எம்.எல்.ஏ.,மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் இந்த கல்குவாரிகளை மூடக்கோரி கடந்த 2007 முதல் பேட்மாநகரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது அவர்களின் நான்காவது போராட்டமாகும்.


பேட்மாநகரம் பகுதியில் இருக்கும் கல்குவாரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்., எம்.பி., ஒருவருக்கு உரிமையானது. அதனால்தான் தமிழகத்தை ஆளும் தி.மு.க., கல்குவாரி பிரச்னையில் மெத்தனம் காட்டி வருகின்றனர், என்றார்.

தகவல் : தூத்துக்குடி வெப்சைடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin