வேறொரு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை வைத்துக் கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களுடைய செல்போன் நிறுவன சேவை செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் வேறு செல்போன் நிறுவன சேவைக்கு மாறுகின்றனர். அப்படி மாறினால் அவர்களுடைய செல்போன் எண்களையும் மாற்ற வேண்டியது இருக்கிறது. அதனால், சேவை குறைபாட்டை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வேறு செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்வதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்தது. நீண்ட நாட்களாக இது குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீடித்து வந்தது. இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் மட்டும் கடந்த நவம்பர் 25-ந் தேதி அன்று இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பில், `தொலைத்தொடர்பு செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றம் செய்யும் வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை பகுதிகளிலும் ஜனவரி 20 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, தொலைத்தொடர்பு மொபைல் போன் எண்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி 2009-ல் உள்ள பிரிவுகள் மாற்றம் செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நன்றி : மாலைமலர் (சூர்யா கண்ணன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக