திங்கள், 14 ஜூன், 2010

ஸ்ரீவைகுண்டத்தில் நள்ளிரவில் 2 மணி நேரம் திடீர் கரன்ட் கட் பொதுமக்கள் அவதி!

ஸ்ரீவைகுண்டத்தில் நள்ளிரவில் நேற்று திடீரென்று 2 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கொசுக்கடியால் தூக்கமின்றி தவித்தனர்.


ஸ்ரீவைகுண்டம் நகரப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து கடந்த வாரம் கடையடைப்பு போராட்டம் நடத்தி பஸ் மறியல் செய்யப்போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது போதிய காற்று இல்லாததால் மின் உற்பத்தி இல்லை. அதனால் கட வுள் கருணை இருந்தால் மட்டுமே கரன்ட் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது தமிழகத்தில் பரவலாக மழையும், காற்றும் இருந்து வருகிறது. ஆனால் மின்தடையும் தொடர்வதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தியாக உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 10.45 மணிமுதல் இரவு 12. 45 மணி வரையிலும் மின் தடை செய்யப்பட்டது. இதனால் குழந்தைகளும், வயோதிகர்களும் கொசுக்கடியால் மிகவும் சிரமப்பட்டனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் பகு தியைப் பொறுத்தவரை மிகப் பெரிய தொழிற்சாலைகள் இல்லாத பகுதியாகும். இங்கு மின்பயன்பாடு என்பது குறை வானதாகும். ஆனால் நள்ளிரவு பொதுவாக வீடுகளில் மின்விசிறிகள் மட்டுமே இயங்கும்.மின்பயன்பாடு குறைவாக உள்ள இந்த சூழ்நிலையில் இரவு நேர மின்தடை தேவையற்றதாகும்.மேலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின்தடை செய்யப்படுவதால் அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், ஜெராக்ஸ், மாவுமில்கள் முடங்குகின்றன.


இதனால் பொருளாதார பாதிப்புக்கு வியாபாரிகள் உள்ளாகுகின்றனர். மேலும் போதிய தூக்கமின்றியே மனப்புழுக்கத்திற்கும், நோய்களுக்கும் காரணமாக இந்த மின்வெட்டு அமைந்து விடுகிறது.எனவே இரவு நேர மின்தடையை தவிர்த்து பகலிலும் மின்வெட்டு நேரத்தில் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


நன்றி : செய்தி , தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin