தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்கள் 4 நாள்கள் நடைபெறவுள்ளன. இதில்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு வேலைப் பிரிவுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஆயிரக்கணக்கான மனுதாரர்களை பணியமர்த்தியுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலையளிப்போரிடம் இருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவினை போக்கும் பொருட்டும் அவர்கள் பகுதிக்கே வந்து நேரடியாக பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது.
வரும் 23 மற்றும் 24 தேதிகளில் (சனி, ஞாயிறு) திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 30 மற்றும் 31 தேதிகளில் (சனி, ஞாயிறு) சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்களில் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் 4 புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளலாம். அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும், கல்வி அல்லாத தொழில் அனுபவம் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பெண்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர் முதல் ஐ.டி.ஐ. டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் பணியாளர்கள், பட்டப் படிப்பு படித்தவர்கள் வரையிலான பணியிடங்களுக்கு ரூ. 442-ம், நர்ஸ், பாரா மெடிக்கல் டெக்னீஷியன்கள் மற்றும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள், பொறியியல் பட்டப்படிப்பு, முதல் நிலை இன்ஜினீயரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை படித்தவர்கள், கணினி பட்டப் படிப்பு வரை ரூ. 772-ம், டாக்டர்கள் ரூ. 995-ம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு நிறுவனத்தின் இந்த சிறப்பு பதிவு முகாமின் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9444690026, 9381800181, 9940276356 ஆகிய செல்போன் எண்களிலும், 044- 24464268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக