துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சார்ஜா தேசியப் பூங்காவில் குடும்ப சங்கமம் விழா கொண்டாடப்பட்டது.
இதில் நூற்றுக்கும் அதிகமானோர் குடும்பத்துடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். காலை உணவுக்குப் பின் துவங்கிய விழாவில் உறுப்பினர்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து மழலைகள், சிறுவர்கள், மகளிர் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டது.
மதிய உணவுக்குப் பின் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். சார்ஜா தேசியப் பூங்கா முழுவதும் தமிழ் இசைப் பாடல்களே ஓங்கி ஒலித்தன.
மாலைத் தேநீருக்குப் பின் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜின்னா ஷெர்புதீன் கலந்துகொண்டார். தமிழ் மன்ற அமைப்பின் ஆலோசகர் ஜெகபர், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் துணைத்தலைவர் சிவகுமார், பொருளாளர் நஜிமுதீன், செயலர் ஃபாரூக் அலியார், இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ், வஹிதா தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக