சனி, 19 டிசம்பர், 2009

ஹிஜ்ரி புத்தாண்டு- படிப்பினைப் பெறுவோம்

ஹிஜ்ரி புத்தாண்டு- படிப்பினைப் பெறுவோம்
ஹிஜ்ரத்- நபி(ஸல்…) அவர்களும் அவர்களுடைய உற்றத் தோழர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட ஒரு பூமியைத்தேடி புறப்பட்டு இன்றோடு 1430 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்…)அவர்கள் எந்த நோக்கத்திற்காக மதீனாவை நோக்கிச்சென்றார்களோ அந்த இலட்சியமும் நோக்கமும் இன்றைக்கும் முஸ்லிம் சமூகம் உணராதது வேதனைக்குரிய ஒன்று.
கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்கும் களியாட்டங்கள் போடுவதற்கும் பயன்படுத்துவதைபோல நமது புத்தாண்டு வருவதில்லை. இஸ்லாமிய ஆண்டை எந்த நிகழ்விலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பாக உமர்(ரலி…) அவர்களுடைய காலத்தில் கலந்தாலோசனை நடைபெற்றபொழுது அவர்கள் தேர்வுச்செய்தது ஹிஜ்ரத் என்ற மாபெரும் நிகழ்வையே.
ஹிஜ்ரத் என்பது ஏதோ உயிரை காப்பாற்றுவதற்காக தமது இருப்பிடத்தை விட்டு ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை மேற்க்கொண்டது அல்ல. இன்றும் பல்வேறு வகையான புலம்பெயர்வுகள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்திற்காக அதுவும் தன்னைப்படைத்த இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்ட இவ்வுலகில் நடைபெற்ற மாபெரும் புலம்பெயர்வுதான் ஹிஜ்ரத்.
இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அதனை தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டு அடியொற்றி நடக்க ஒரு சமூகம் தேவை என்ற நோக்கத்திற்காகத் தான் மக்காவை விட்டும் மதீனாவிற்கு தனது வசிப்பிடம், சொந்தங்கள், செல்வங்கள் ஆகியவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதீனாவை நோக்கிப்புறப்பட்டார்கள் நபி(ஸல்…) அவர்களின் தலைமையில் அந்த லட்சிய வீரர்கள்.

எந்த லட்சியத்திற்காக ஹிஜ்ரத் மேற்க்கொள்ளப்பட்டதோ அந்த லட்சியம் நிறைவேறவும் செய்தது. அந்த ஹிஜ்ரத்திலிருந்து நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது. ஆனால் அதற்கு பக்கங்கள் போதாது. தற்போதைய நமது சமுதாயத்தின் நிலை என்ன?, கேவலம் ஆங்கிலப் புத்தாண்டையும், தமிழ் புத்தாண்டையும் அறிந்திருக்கும் நம்மவர்கள் ஹிஜ்ரி ஆண்டையோ அல்லது அதன் மாதத்தையோ பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.
நோன்பு நோற்கும்பொழுது ரமலான் என்றுத் தெரிகிறது. தியாகப்பெருநாள் கொண்டாடும்பொழுது துல்ஹஜ் மாதம் என்று தெரிகிறதேயொழிய இஸ்லாமிய ஆண்டைப்பற்றிய போதிய அறிவும் அதில் கிடைக்கும் படிப்பினைகளும் இல்லாமலேயே நம்மில் பெரும்பகுதியினர் உள்ளோம்.
ஆங்கில ஆண்டை நம்மீது திணித்து விட்டார்கள் இஸ்லாத்தின் எதிரிகள். அதனுடைய வாரக்கிழமைகளின் பெயரை சிந்தித்துப் பார்த்தால் தெரியும் அந்த 7 தினங்களின் பெயர்களும் ரோமர்கள் வணங்கி வந்த கடவுள்களின் பெயர்கள். இன்று இந்தக்கலாச்சாரம் நமது வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது.
உலகளாவிய அளவிலான ஹிஜ்ரா காலண்டரை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இல்லை. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் செல்வ வளங்கள் இருந்தும் முஸ்லிம்கள் புழங்குவதற்கு ஒரு இஸ்லாமிய காலண்டரை நம்மால் ஏன் உருவாக்க இயலவில்லை. பிறையை கணக்கிடுவதிலேயே நம்மிடையே பல்வேறுவிதமான சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தான் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான முடிவுகளை நம்மால் எடுக்க இயலவில்லை.
நபி(ஸல்…)அவர்கள் ஹிஜ்ரத்தின் ஊடே கட்டியெழுப்பிய அந்த சமூகம் காணாமல் போய்விட்டது. ஹிஜ்ரத்தின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை பெறவேண்டும்.
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய மாவீரன் மால்கம் X கூறிய கூற்று இங்கு நினைவுக்கூறத்தக்கது "தனது சொந்தவரலாற்றை மறந்த சமுதாயத்தால் வரலாறு படைக்க இயலாது". ஆகவே மீண்டும் ஒரு இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அந்த ஹிஜ்ரத்திலிருந்து பாடங்களை பயின்று நமது சமூக வாழ்க்கையில் அதனை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவேண்டும்.
ஹிஜ்ரத்தின் வரலாற்றை படித்து முடித்து விட்டு புத்தக அலமாரியில் பாதுகாக்காமல் அதனை செயல்களத்திற்கு கொண்டுவர நம் அனைவருக்கும் வல்ல இறைவனாகிய அல்லாஹ் துணைபுரிவானாக!

யா அல்லாஹ் இஸ்லாமிய சமூக புனரமைப்பில் எங்களையும் பங்கேற்கசெய்வாயாக! அந்த சமூகம் விரைவில் இவ்வுலகில் புலர்வதற்கு நீ துணைபுரிவாயாக! ஆமீன்!
அனைவருக்கும் பாலைவனத்தூதின்

இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
குல் ஆம் வ அன்தும் பி ஹைர்

இவன்
நெல்லை ஹமீது & சிந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin