புதன், 2 டிசம்பர், 2009

தடை செய்தாலும் இயங்கும் சீன செல்போன்கள்... !


கடந்த சில தினங்களாக 'ஐ.எம்.இ.ஐ. எனப்படும் ரகசிய எண்கள் இல்லாத செல்போனா... இனி செல்லாது செல்லாது' என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது அந்தத் தடை செல்லுபடியாகவில்லை. காரணம் அரசு பரிந்துரைத்து, செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திய செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் முழுமையாக பலனளிக்கவில்லை.

ரகசிய குறியீட்டெண்கள் இல்லாத செல்போன்கள் தேச விரோத சக்திகளின் செயலுக்கு துணைபோகும்... எனவே அவற்றை அடியோடு செயலிழக்க வைக்கப் போகிறோம் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி ஐஎம்இஐ எண்கள் இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கும் நிலை தோன்றியது. நவம்பர் 30-ம் தேதிக்குள் எல்லா செல்போன் சேவை நிறுவனங்களும், இந்த செயலிழப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களும் நவம்பர் 30க்குள் தங்கள் இணைப்பை ஐ.எம்.இ.ஐ. உள்ள மொபைலுக்கு மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தங்களிடம் உள்ள போன்கள் ஐ.எம்.இ.ஐ. எண் உள்ளதுதானா என அறிய எஸ்எம்எஸ் ஒன்றையும் அனுப்பச் சொல்லியிருந்தனர்.

இந்த வகையில் அனைத்து செல்போன் நிறுவனங்களுமே கணிசமாக லாபம் பார்த்தன.

இந் நிலையில், சிலர் ஐ.எம்.இ.ஐ. இல்லாத மொபைலுக்கு, ரகசிய எண் தருவதாக தலா ரூ. 200 வசூலித்த கதையும் நடந்துள்ளது.

இதையெல்லாம் செய்ய முடியாத சிலர், வருவது வரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டனர்.

ஆனால் நவம்பர் 30க்குப் பிறகு இயங்காது என்று கருதப்பட்ட, ரகசிய எண்கள் இல்லாத செல்போன்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் பழையபடியே இயங்கின. அரசுத் துறை மொபைல் சர்வீஸான செல் ஒன் இணைப்பு பெற்ற போன்களும் கூட இயங்கின.

இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அரசு எங்களுக்குப் பரிந்துரைத்த தொழில்நுட்பத்தைப் பிரயோகித்துவிட்டோம். ஆனால் அது முழுமையாக வேலை செய்யவில்லை. ஆனால் இதற்காக அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொழில்நுட்ப சிக்கலை சரி செய்து மீண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந் நிலையில் ஐஎம்இஐ எண்கள் உள்ள, சீனா மற்றும் கொரிய மொபைல்களை இனி தருவிக்க மொபைல் விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கால அவகாசம் நீடிப்பு..

இதற்கிடையே, ஐஎம்இஐ எண்கள் இல்லாத போன்களுக்குரியவர்கள் அந்த எண்ணைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு, புதுவைக்கான செல்போன் டீலரான அமீத் என்பவர் கூறுகையில், எண்கள் பெற ஒரு வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஎம்இஐ எண் இல்லாததால் துண்டிக்கப்பட்ட போன் வைத்திருப்பவர்கள் இந்த எண்ணைப் பெற விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin