வெள்ளி, 13 நவம்பர், 2009

சொத்துக் கணக்கை வெளியிட்ட தமிழகத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி


சொத்துக் கணக்கை வெளியிட்ட தமிழகத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றுள்ள நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், தான் 20 வருட காலமாக அரசுப் பணியில் இருந்தபோதிலும், மிகக் குறைவான சொத்துக்களுடன் இருப்பதற்குக் காரணம், நேர்மையாக இருந்ததால்தான் என்று கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருக்கும் உ.சகாயம், சமீபத்தில் தனது சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளார்.

அவர் குறித்த பல நல்ல செய்திகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சகாயம். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. சமூகப் பணி பட்டம் பெற்ற முதல் பேட்ச்சைச் சேர்ந்தவர் சகாயம். அதேபோல சட்டமும் படித்துள்ளார் சகாயம்.

18 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்தார் சகாயம். கடந்த 2001ம் ஆண்டு அவருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக மிகத் துணிச்சலுடன் போராடுபவர் சகாயம்.

தான் பல்வேறு பதவிகளில் வகித்தபோது, மணல் கொள்ளையர்கள், குளிர்பானக் கம்பெனியின் மோசடிகள், ஹோட்டல்களில் நடைபெறும் முறைகேடுகள், காஸ் டீலர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கடுமையாகவும், துணிச்சலாகவும், இடைவிடாமலும் போராடி வெற்றி பெற்றவர் சகாயம்.

காஞ்சிபுரத்தில் இவர் பணியில் இருந்தபோது, சட்டவிரோத மணல் கொள்ளையர்களை எதிர்த்து கடுமையாக செயல்பட்டார். இதற்காக அவர்களால் தாக்கவும் செய்யப்பட்டார். இருந்தாலும் தனது பணியிலிருந்து அவர் சற்றும் ஓயவில்லை.

1999ம் ஆண்டு தமிழகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் சகாயம். அப்போது மிகப் பெரிய பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின் குளிர்பானங்கள் மனிதர்கள் குடிக்கவே லாயக்கற்ற மோசமான தரத்துடன் இருப்பதாக தெரிவித்து அந்த குளிர்பானத் தயாரிப்பு நிறுவன பிரிவை மூட அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

சிவில் சப்ளைஸ் துறையி்ன் துணை ஆணையராக இருந்தபோது, வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதை கண்டுபிடித்து ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பல்வேறு ஹோட்டல்களில் இவரே நேரடியாக ரெய்டு நடத்தி அதிரடியாக சிலிண்டர்களைக் கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், எனது கணக்குப்படி, இப்படிப்பட்ட மோசடியான செயல்களால் எண்ணை நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 4000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அரசுக்கும் விரிவான அறிக்கை அனுப்பி வைத்தார்.

அதேபோல, ஒரு மாவட்டத்தில் வருவாய் அதிகாரியாக இருந்தபோது, ஒரு பிரபல ஹோட்டல் ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுக் கொடுத்தார்.

45 வயதாகும் கலெக்டர் சகாயம் தனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவித்தது பெரிய விஷயமே இல்லை என்கிறார் அடக்கத்துடன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது சொத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இது விதி. நான் அதையும் தாண்டி, எனது சொத்து விவரத்தை மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அவ்வளவுதான்.

பொதுமக்கள் மத்தியில், அரசுப் பணியாளர்கள் குறித்து மோசமான கருத்துக்கள் உள்ளன. இது அனைவருக்கும் தெரியும். இந்த நிலை நீடித்தால், அரசு நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கு இது மிகப் பெரும் தடையாக மாறி விடும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்தான மிகப் பெரும் தடைக்கல் என்பது எனது கருத்து. நான் ஊழல் கரையோடு இருக்க மாட்டேன் என்பதை வெளி்ப்படுத்தும் வகையில்தான் இந்த சொத்துக் கணக்கு விவர வெளியீடு. நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்கிறார்.

சகாயத்தின் சொத்து விவரம்...

வங்கிக் கணக்கில் பண இருப்பு - ரூ. 7172.
அசையா சொத்து - மதுரையில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள வீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin