ஸ்ரீவைகுண்டம் தாலுகா மற்றும் ஏரல் பகுதியில் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அதிக அளவில் வாழை, நெல் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை சீரான பருவமழை இல்லாததாலும், விவசாய பயிர்களுக்கு போதிய விலை இல்லாததாலும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை ஓரங்கட்டிவிட்டனர்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவில் பருவமழை பெய்த்தாலும் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைத்தாலும் விவசாயிகள் ஓரளவு செழிப்படைந்தனர்.
இதனால் நெல், வாழை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள் மீண்டும் விவசாயத்தில் மும்முரமாக இறங்கியுள்ளனர். பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அதை மீறி தற்போது நல்ல நிலையில் விவசாயம் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில்தான் அதிக அளவு விவசாயம் நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை முற்றிலும் ஏமாற்றி விட்டது. இதனால் பல இடங்களில் வாழை, உளுந்து பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது. கோடை மழைதான் இல்லை. பருவமழை காலத்தில் பெய்யும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பருவமழை தாமதத்தால் விவசாயிகள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.
இந்நிலையில் திடீரென பருவமழை தொடங்கிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழை துவங்கியதால் முதற்கட்டமாக உழவு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு வரை தற்போதைய கால கட்டத்தில் குளங்களுக்கு தண்ணீர் பெருகி இருந்ததால் விவசாய பணிகள் மும்முரமாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு மழையின் தாமதத்தால் விவசாய பணிகள் தாமதமானாலும் இந்த ஆண்டும் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். தொடர்ந்து போதிய அளவு பருவமழை பெய்து விவசாயிகளை தொடர் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது இயற்கையின் கையில்தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக