புதன், 7 அக்டோபர், 2009

'எயார் இந்தியா' விமானத்தை தடுத்து நிறுத்திய சுண்டெலி

இந்தியா, கேரள மாநிலம், கோழிக்கோட்டிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 412 பயணிகளுடன் சவூதி அரேபியா, ரியாத்திற்குப் புறப்படவிருந்த 'எயார் இந்தியா' விமானத்தில் சுண்டெலியொன்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. மேற்படி விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது விமானியின் அறைக்கு பதற்றமாக வந்த பணிப்பெண் ஒருவர், விமானத்தில் சுண்டெலி ஒன்று சுற்றித்திரிவதாகக் கூறினார். இது குறித்து விமானி, விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக விமானத்தை இயக்கவேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.

பின்னர் விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள், விமானத்தில் ஏறி எலிவேட்டையில் இறங்கினர். நீண்ட நேரத் தேடுதலுக்கு பிறகும் எலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, எலியைக் கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக விமானம் மும்பை கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்து, பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதேபோன்று கடந்த மாதமும் கனடா நோக்கிச் சென்ற 'எயார் இந்தியா' விமானத்தில் எலி புகுந்ததால் பஞ்சாப்பில் அவசரமாக தரை இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin