புதன், 7 அக்டோபர், 2009

தேசிய அவமானத்தில் தமிழகத்திற்கு முதலிடம்

ஒரு காலத்தில் மிளகாய்,மல்லி,சீரகம்,சோம்பு,மிளகு என எல்லாவற்றையும் தனித்தனியாக வாங்கி தேவையான ‍போது அம்மி மூலமாக அரைத்து சுவையான குழம்பு தயாரிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு ரெடிமேட் மசாலாக்கள் அறிமுகபடுத்தப் பட்டன. மிளகாய் தூள், மல்லித்தூள் என தனித்தனியாக வந்து கொண்டிருந்த மசாலாக்கள் பின்னர் குழம்புத்தூள்,மீன் மசாலா, கறி மசாலா என வேகம் கண்டது. ஆனால் இப்போது என்ன நிலை? உடனடி மீன்குழம்பு, உடனடி வத்தக் குழம்பு, உடனடி புளிக்குழம்பு என டப்பாக்களில் அடைக்கப் பட்டு தாயாராய் கிடைக்கிறது. அதிலே கொஞ்சம் சுடு தண்ணீரை ஊற்றிக் கல‌ந்தாலே போதும். குழம்பு தயார். அதுமட்டுமின்றி இன்றைக்கு உடனடி சப்பாத்தி, உடனடி பரோட்டா, உடனடி தயிர்சாதம் என அனைத்துமே உடனடியாகி விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் உடனடி தாய்ப்பால் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அம்மிகளும், ஆட்டுக்கல்லும் செய்த வேலைகள் பறிக்கப்பட்டு மிக்சிகளுக்கும் கிரைண்டர்களுக்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் அவைகளுக்கும் வேலையிருக்காது. நீங்கள் நினைக்கலாம் என்னடா தலைப்புக்கே சம்பந்தம் இல்லாமல் கதை போயிக்கிட்டு இருக்கு என்று. சம்பந்தம் இருக்கிறது.

எவ்வாறு நமது இல்லங்களில் அம்மிகளும் ஆட்டுக்கல்களும் இனிமேல் உபயோக‌மில்லை என தூக்கியெறியப்பட்டதோ, அதேபோல இனியும் நமக்கு உபயோகமில்லை என பல பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட முதியவர்கள் இன்று அனாதைகளாக நிராதரவாக தெருவிலே,பிளாட்பாரங்களிலே,முதியவர் இல்லங்களிலே! கூட்டுக்குடும்பங்கள் சுருங்கி தனிக்குடுத்தனமாக ஆனபிறகு முதியவர்கள் தேவையில்லாதவர்களாக ஆகிவிட்டனர்.

ரேசன் பொருட்கள் வாங்குவதற்கும், கரண்டு பில் மற்றும் போன் பில் கட்டுவதற்கும்,குழந்தைகளை கவனித்துக் கொள்வத‌ற்கும் என பல வேலைகள் இருந்ததால் அவர்களின் சேவை அனைவருக்கும் தேவையாய் இருந்தது.ஆனால் இப்போது பில் கட்டுவதற்கும், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் ப‌ல நிறுவனங்கள் முளைத்து விட்டதால் முதியவர்கள் இன்றைய நிலையில் ஒரு பெரும் சுமையாகவே மாறிவிட்டனர் பிள்ளைகளுக்கு. அதுமட்டுமின்றி மிக முக்கியமாக இளம்தம்பதிகளின் சந்தோசத்திற்கு பெரியவர்கள் தடையாய் இருந்து இம்சை செய்கிறார்கள் என்பதாலேயே அதிகஅதிகமாக பெற்றோர்கள் முதியோர் இல்லங்களை நோக்கித் தள்ளப்படுகின்றனர். இந்தியாவிலே மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் முதியோர் இல்லங்கள் இருப்பதாகவும் இதிலே தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும் சமீபத்திய சர்வே ஒன்று தெரிவிக்கிறது. தமிழகத்திலே உள்ள ஆதரவற்ற முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் என்றும் அதிலே 3 லட்சம் பேர் பெண்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் மருமகள் கொடுமையாலேயே அதிகபட்சமாக கணவனின் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலே கொண்டு தள்ளப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆக இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது கணவனின் பெற்றோர்கள் தான் அதிகமாக‌ முதியோர் இல்லங்களிலே தள்ளப்படுகிறார்கள் என்பதை. காரணம் என்ன? தற்சமயம் பெருகிவிட்ட தொலைக்காட்சி தொடர்களில் அதிகதிகமாக காட்டப் படுவது மருமகள் மாமியாரை எப்படி போட்டுத் தள்ளுவது? மாமியார் மருமகளுக்கு எப்படி சோத்திலே விசத்தை வைப்பது என பலவிதமான டிரிக்குகளை அள்ளிவழங்குகின்றன மெகா தொடர்கள். அதைப் பார்க்கும் மாமியாருக்கும்,மருமகளுக்கும் வேறு என்ன தோன்றப் போகிறது?

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சி செய்திகளின் சிறப்புப் பார்வையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் முதியவர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப் படுவதில்லை என்ற அதிர்சியான செய்தியுடன் அந்த முதியவர்களின் அழுகையுடன் கூடிய பேட்டியும் ஒளிபரப்பப் பட்டது. பெரியவர்களை மதித்து அவர்களைக் கவுரவித்து அவர்கள் மீது அன்பு செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1990ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது.ஆனால் நமது தேசத்தைப் பொருத்தவரை அது முதியோர் இல்லங்களிலே உள்ளவர்களுக்காக கொண்டாடப் படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இப்போது இருக்கக் கூடிய முதியோர் இல்லங்களை இனியும் குறைக்க இயலாது. ஆனால் இனியும் உருவாகாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin