ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 13 அக்டோபர், 2009
ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: வாட்டிகனில் எதிர்ப்பு
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை வாட்டிகன் பத்திரிகை ஒன்று கண்டித்துள்ளது. வாட்டிகன் திருச்சபை செய்திகளை தாங்கி வரும் பத்திரிகையான ‘லா’ஒசர்வட்டோர் ரொமானோ’ இச் செய்தியை வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகை, ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவது முந்திரிக்கொட்டைத்தனம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது, அரசியல் மூலம் தான் உலக அமைதியை நிலைநாட்ட முடியும் என்ற தவறான செய்தியை உலகுக்கு தெரிவிப்பதாகவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. .
இதுகுறித்த கட்டுரையில், ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆச்சரியமூட்டுவதாகவும், அமெரிக்க அதிபராக பதவியில் இருக்கும்போதே ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுதான் முதல் முறை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
90 வருட அமெரிக்கச் சரித்திரத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. வேறு எந்த அதிபருக்கும் வழங்கப்படாத இந்த பெருமை ஒபாமாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 2002 இல் ஜிம்மி கார்ட்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அவர் பதவியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று அப்பத்திரிகை செய்தி கூறுகிறது.
மேலும் ஒபாமா குறித்த மதச் சர்ச்சைகள் மற்றும் கருக்கலைப்பு பற்றிய அவருடையக் கொள்கை குறித்தெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கருக்கலைப்பு குறித்த ஒபாமா அரசின் திட்டங்கள் அமெரிக்க கத்தோலிக்க கிறித்தவர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.
1979 இல் அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள இப்பத்திரிகைச் செய்தி தெரசாவும் ஒபாமாவும் ஒன்றா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தகுதிப் பெற்றவரான இரண்டாம் போப் ஜான் பாலுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. காரணம், அவர் ஈராக் மீதான அமெரிக்க போரை கண்டித்தார் என்பதுதான் என்று அது சாடியிருக்கிறது.
ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட விவகாரத்தில் வாட்டிகன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இப்பத்திரிகை, வாட்டிகன் சர்ச் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘ஒபாமா வுக்கு நோபல் என்பதை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலவில்லை என்றாலும், அமெரிக்கா ஒரு வல்லரசு என்பதை விட, உலக நாடுகளை அணு ஆயுதங்களை கீழே போட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை பாராட்டியுள்ளதாக’ கட்டுரையின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தது சரியான முடிவுதான் என்று நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
ஒபாமா பதவியேற்று 9 மாதங்கள் கடந்துவிட்டன. அவரால் இயன்ற மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அவருடைய நவீனத்துவம், ஆயுதங்களை கைவிடல், தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு எதிரான அவருடைய போராட்டங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்று நோபல் கமிட்டி விளக்கமளித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக