சனி, 3 அக்டோபர், 2009

காந்தி ஜெயந்தியன்று கை நீட்டிய சுகாதார ஆய்வாளருக்கு ஆப்பு

சென்னை: சம்பள உயர்வு வாங்கித் தர, துப்புரவுத் தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். வடபழனி பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (48); அண்ணாநகர் 74வது கோட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்.

இவரது மேற்பார்வையில் 60க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளிகள் அண்ணாநகர் பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர்.சாமுவேல்தான் அவர் கள் வேலை செய்யவேண்டிய இடம், விடுமுறை வழங்குவது போன்ற பணி யை செய்துவருகிறார். அவர்களது பணி பதிவேட் டினை (சர்வீஸ் ரிஜிஸ்டர்) கையாண்டு வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரைச் சேர்ந்தவர் மணவாளன்(45).தினமும் அங்கிருந்து அண்ணாநகர் வந்து, துப்புரவுப் பணி செய்து வருகிறார். கடந்த சில மாதங் களாக உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர், மீண்டும் வேலைக்கு வந்தார்.

அப்போது, அவருக்கு ஆறாவது சம்பளக் கமிஷன்படி, நான்கு மாதமாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்பதும், சர்வீஸ் ரிஜிஸ்டரில் பதியாததே அதற்கு காரணம் என்பதும் தெரியவந்தது. உடனே, சாமுவேலை அணுகி, தனக்கு ஊதிய உயர்வு வாங்கித் தரும்படி கேட்டார். முதலில் மறுத்து சாமுவேல், 2,500 ரூபாய் கொடுத்தால் சர்வீஸ் ரிஜிஸ்டரில் பதிவு செய்து, மண்டல அலுவலகத்திற்கு அனுப்புவதாக கூறினார். "தான் வாங்கும் ஒரு மாதச்சம்பளத்தை எப்படி தரமுடியும்' என்று தனது வறுமை நிலையை மணவாளன் கண்ணீருடன் எடுத்துக் கூறினார். சற்றும் மனமிரங்காத சாமுவேல், "பணம் கொடுத்தால் தான் உனக்கு சம்பள உயர்வு' என்று, கறாராக கூறிவிட்டார்.

அதனால், மனமுடைந்த மணவாளன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், தனிப்படை அமைக்கப் பட்டது. நேற்று காந்திஜெயந்தியை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள் விடுமுறை என்றாலும், அத்தியாவசிய பணி என்பதால், துப்புரவுப் பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. எனவே, லஞ்சத்தை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள கோட்ட அலுவலகத்திற்கு வந்து தருமாறு, சாமுவேல் கூறினார்.

ரசாயனம் தடவிய 2,500 ரூபாய் பணத்தை மணாளன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த தனிப்படையினர் சாமுவேலை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், லஞ்சப்பணம் தவிர, நூறு, ஐநாறு என 4,500 ரூபாயை சாமுவேல் வைத்திருந்தார். அப்பணம் முழுவதும் துப்புரவுத் தொழிலாளிகள் தனக்கு "அன்பளிப்பாக' அளித்ததாக கூறினார். தெருவைக் கூட்டும் துப்புரவுப் பணியாளர்களிடம் தினந்தோறும் லஞ்சம் வாங்குவதை பெருமையாக அவர் கூறியதைக் கேட்டு, தனிப்படையினர் தலையில் அடித்துக் கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin