மாணவர்களிடையே மத நல்லிணக்கம் தேவை என்று வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துல்ரகுமான் வலியுறுத்தினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாணவர் பேரவையைத் தொடக்கி வைத்து அவர் பேசினார். "விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
மாணவர்களிடையே மத நல்லிணக்கத்தை எடுத்துக்கூறும் பணியில் மாணவர் பேரவையினர் ஈடுபட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார். விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியது: நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் இடையேயான பாலமாக மாணவர் பேரவை செயல்படும்.
நாட்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் இது 50 முதல் 80 சதவீதமாக உள்ளது. உலக அளவில் உயர்கல்வி பயில்வோரின் சராசரி 27 சதவீதம். எனவே, நம் நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் சதவீதத்தை 20 முதல் 30 வரையாவது உயர்த்தியாக வேண்டும் என்றார்.
விஐடி நுழைவுத் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த தமிழக மாணவ-மாணவிகளுக்குத் தலா ரூ.25 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மாணவர் பேரவைத் தலைவர் ஜெ.முகுந்த் நீலகண்டன், பேரவை அறிக்கை சமர்ப்பித்தார்.
விஐடி இணை வேந்தர்கள் சேகர்விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் டி.பி.கோத்தாரி, இணை துணைவேந்தர் ஆன்ந்த் ஏ.சாமுவேல், விஐடி மாணவர் நலன் இயக்குநர் கே.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக