சென்னை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் மாதம் வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வந்தது. தற்போது சிறப்பு ரயில்களை நவம்பர் மாதம் வரைக்கும் ரயில்வே நீட்டித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருவதால் சாதாரண நாட்களிலும் கூட ரயில்களில் இடம் கிடைக்காத நிலை காணப்படுகிறது. எனவே நவம்பர் மாதம் வரை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.
தொடர்ந்து பண்டிகைகள்...
இந்த மாதத்திலிருந்து தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளன. முதலில் வருகிற 21ம் தேதி ரம்ஜான் வருகிறது. 27ம் தேதி ஆயுத பூஜை வருகிறது. 28ம் தேதி விஜயதசமி. அடுத்த ஆண்டு 17ம் தேதி தீபாவளி வருகிறது.
தீபாவளியையொட்டிய நாட்களில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகித பயணிகள் கூடுதலாக ரயிலில் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேவையான நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர 5 நாட்கள் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
திங்கட்கிழமை தோறும் எண்.0639 சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கும், செவ்வாய்க்கிழமை தோறும் எண்.0651 ரயில் பிற்பகல் 3.40 மணிக்கும் புறப்பட்டு செல்கிறது. சென்டிரலில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் எண்.0607 சிறப்பு ரயில் இரவு 8.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறது. வியாழக்கிழமை தோறும் எண்.0637 எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறது.
சனிக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு செங்கோட்டை சிறப்பு ரயில் செல்கிறது. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் நவம்பர் மாதம் வரை இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லும் ரயில்களில் இடம் இல்லை என்றாலும் சிறப்பு ரயில்களில் இடவசதி உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இது தவிர சென்டிரலில் இருந்து திருச்செந்தூருக்கு ஏழைகள் ரதம் ரயில் வாரத்தில் ஒருமுறை இயக்கப்படுகிறது. முற்றிலும் 3 அடுக்கு ஏ.சி. படுக்கை வசதி மட்டுமே உள்ள இந்த ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் இட வசதி உள்ளது. இதையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக