புதன், 23 செப்டம்பர், 2009

பாஸ்போர்ட்-இனி தபாலில் விண்ணப்பிக்க முடியாது


சென்னை: வரும் 25ம் தேதி முதல் அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் அனுப்பப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களிடமிருந்து கவுண்டர்களில் நேரடியாகவும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50 விரைவு அஞ்சல் மையங்கள் மூலமாகவும்,

மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பாஸ்போர்ட் பிரிவுகள் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்சிகள் மூலமும், தபால் மற்றும் கூரியர் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கோப்பு எண்களை பெறுகின்றனர். ஆனால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தபால் அல்லது கூரியர் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள், இந்த கோப்பு எண்ணை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் கோப்பு எண்ணை தெரியப்படுத்துவதும், அதற்கான கடிதங்கள் அனுப்புவதும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மிகுந்த பணிச் சுமையை ஏற்படுத்துகிறது.

அத்துடன் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களின் நகல்படிகளை மூல ஆவணங்களுடன் சரி பார்க்க இயலாததால் போலியான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

மாவட்ட அளவில் விண்ணப்பங்களை ஏற்கும் திட்டம் பரவலாக்கப்பட்டிருப்பதால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டாம் என்று விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட பாஸ்போர்ட் பிரிவிலோ அல்லது விரைவு அஞ்சல் மையங்களிலோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனால் வரும் 25ம் தேதியில் இருந்து தபால் மற்றும் கூரியர் மூலம் அனுப்பப்டும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அந்த விண்ணப்பங்கள் அவர்களுக்கே திருப்பி அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆடம்பரமாக விளம்பரம் செய்துவிட்டு இப்போது ஜகா வாங்கியுள்ளது பாஸ்போர்ட் அலுவலகம்.

இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கும்போதே இந்த சிக்கல்கள் வருமே என்று இவர்களுக்குத் தெரியாதா..?

மேலும் சிக்கல் இருந்தால் அதைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதை விட்டுவிட்டு இந்தத் திட்டத்தையே கைவிட்டுள்ளனர் பாஸ்போர்ட் அதிகாரிகள்.

இதுவல்லவோ பொறுப்புணர்வு!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin