சனி, 19 செப்டம்பர், 2009

உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நல வாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்க ஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவைகளில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உறுப்பினர்களாக சேரலாம்.

இவ்வாறான நிலையங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்பவர்களுக்கு, விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை, ஊனம் ஏற்பட்டால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உதவித் தொகை, இயற்கை மரணத்திற்கு உள்ளானவர் குடும்பத்திற்கு ரூ. 15 ஆயிரம் உதவித் தொகை, குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்நல வாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவராவர்.

அரசு அல்லது அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, அந்நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்களை பெற இயலாது.

வேறு நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை இலவசமாக வாரியத்தால் வழங்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin