வெள்ளி, 11 செப்டம்பர், 2009

மலரும் மொட்டின் சாதனையோ,சாதனை

மதுரை: "சாதனை படைத்த மதுரை பள்ளி மாணவி லவினாஸ்ரீ(9)க்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க பரிந்துரைப்பேன்,' என்று காங். பொதுச் செயலர் ராகுல் உறுதியளித்துள்ளார். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது இரண்டாவது மகள் லவினாஸ்ரீ. கருப்பாயூரணி லட்சுமி மெட்ரிக். பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். மூன்று வயதிலேயே 1330 குறள்களை தங்குதடையின்றி கூறி லிம்கா சாதனையில் இடம்பிடித்தார்.

பின் கம்ப்யூட்டர் துறையில் ஆர்வம் கொண்டார். மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில், கணிக்கும் திறன், ஆங்கில நுண்ணறிவுத் திறன், தொழில்நுட்ப முறையில் தீர்வு காணும் திறன், முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவற்றை சோதித்து பார்க்கும் மிக கடுமையான படிப்பான "மைக்ரோசாப்ட் சர்ட்டிபைடு புரொபஷனல் (எம்.சி.பி.)' தேர்வில் பங்கேற்றார். இது 25 வயது முதல் 30 வயதுடைய எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ., மாணவர்கள் எழுதும் தேர்வு. "ஆன்-லைன்' மூலம் நடத்தப்படும் இத்தேர்வில் உலக அளவில் 1000 மதிப்பெண்ணுக்கு 842 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். ஜனவரியில் சென்னையில் லவினாஸ்ரீயை பாராட்டிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், "இந்தியாவின் சொத்து' என்று சான்றிதழ் கொடுத்தார். இந்நிலையில் மதுரை வந்த ராகுலை லவினாஸ்ரீ சந்தித்தார். அவரது சாதனைகளின் சான்றிதழ்களை பார்த்து ஆச்சரியப்பட்ட ராகுல், பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.

லவினாஸ்ரீ கூறியதாவது : ராகுல் சார் மதுரை வருவதை அறிந்து எங்கப்பா மூலம் பாதுகாப்பு ஆபீசர் சந்தீப் தத்தாவை இரண்டு நாளுக்கு முன்பு சந்திச் சேன். நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு சர்க்கியூட் ஹவுசில் சந்திக்க ராகுல் "அப்பாயின்ட்மென்ட்' கொடுத்தார். அவர் லேட்டாக வந்ததால் சந்திக்க முடியவில்லை. இதனால் நேற்று காலை 7 மணிக்கு வருமாறு அழைப்பு வந்தது. குடும்பத்தினருடன் சந்திக்க காத்திருந்தேன். காலை 7.40 மணிக்கு ராகுல் மாடியிலிருந்து இறங்கி வந்தார்.

"ஹலோ' என்று புன்சிரிப்புடன் என்னை கூப்பிட்டார். பூச்செண்டு கொடுத்து "வெல்கம் சார்' என்றேன். எனதுசாதனை சான்றிழ்களை அவரிடம் காட்ட, ஒவ்வொன்றாக படித்து ஆச்சரியப்பட்டார். "கங்கிராட்ஸ்' என்று கைகொடுத்த அவர், "சாதனைகளை புரிந்து இந்தியாவிற்கு பெருமை தேடி தரவேண்டும்' என்று மீண்டும் பாராட்டினார். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க பரிந்துரைப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு கூறினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. கே. ராதாகிருஷ்ணன் இவரது பெரியப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin