திங்கள், 10 ஆகஸ்ட், 2009

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !

என் இதயங்கவர்ந்த வாசகர் நெஞ்சங்களே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் நல்லருள் நிலவிட பிரார்த்தனை செய்தவனாக துவங்குகிறேன்…. நான் எழுதிய “ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல்” கட்டுரையை படித்துவிட்டு நீங்கள் கொடுத்து வரும் ஆலோசனை களையும், நல்லாதரவையும் எண்ணி பெருமிதம் கொண்டவனாக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் !

எனது நெருக்கமான நண்பர் ஒருவர் தம் பிரச்சனையை என்னிடம் சொன்னதைத் தான் உங்களிடம் கட்டுரையாய் சமர்ப்பித்துள்ளேன். நான் சொல்லியுள்ள விஷயங்கள் தனிப்பட்ட ஒருவரின் விஷயமாக பார்க்காமல் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்த்ததால் உருவானதே இந்தக் கட்டுரை !

இதை மிகவும் நிதானமாக படித்துவிட்டு ஒவ்வொரு வாசகரும் அவரவர் தம் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து என்னவென்று சொல்வேன்? எவ்வளவு அற்புதமான கருத்துக்கள். சமூகத்தின் மீது கவலை கொண்ட நிறைய பேர் பாதிக்கப் பட்ட நண்பரின் நிலை குறித்து தங்கள் கண்கள் குளமானதாகவும், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென புரியவில்லையென்றும் கூறினர்.

சில வாசகர்கள் கட்டுரைக்குரிய நபர் இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டினா? என்றெல்லாம் கேட்டனர். காரணம் நான் அவரின் மதத்தை அடையாளப்படுத்தவில்லையாம் !
பிறப்பால் மனிதனாகவும், பேசும் மொழியால் தமிழனாகவுமே நான் அவரை பார்த்ததால் மதத்தை இங்கு குறிப்பிடவில்லை என அந்த வாசகர்களுக்கு பதிக் கூறினேன்.

உங்கள் கட்டுரை காலத்திற்கேற்ற கண்ணாடி ! என் கணவரின் நிலையும் அப்படித்தான் உள்ளது உரிமைகளையும், உணர்ச்சிகளையும் இழந்தவளாய் நான் பரிதவிக்கிறேன். தயவுசெய்து என் கணவரின் பார்வைக்கு உங்கள் கட்டுரையை அனுப்புவீர்களா? எனக்கேட்டு அவரது கணவரின் மின்னஞ்சல் முகவரியையும் நமக்கு கொடுத்தார் மதுரையைச் சேர்ந்த பெண் வாசகி ஒருவர். அவர் விருப்பப்படியே நமது கட்டுரையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைத்தோம் !

காரைக்கால் நண்பர் அமீருத்தீன் தொலைபேசி வாயிலாக நம்மை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபர் இனியும் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. அவர் உடனே கேன்சலில் ஊர் போகட்டும் ஊரில் போய் அவருக்கு தெரிந்த தொழில் எதையாவது செய்து கொண்டு மனைவியுடன் மகிழ்வோடு வாழட்டும். தொழில் செய்ய என்னால் இயன்ற பொருளாதாரத்தை செய்யவும் தயார் எனக் கூறியதை கேட்டதும் அவரது அளவு கடந்த மனிதாபிமானத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு மனிதனும் அளவுக்கு மீறிய வகையில் சாமான்களை கட்டிக் கொண்டு பெட்டி, பெட்டியாய் இறக்குவதால் தான் ஊரில் இருக்கும் பெண்களுக்கு இங்கு படும் நம்மவர்களின் கஷ்டங்கள் தெரிவதில்லையென்றும், ஒரு முறை பொருள் கொடுத்து எப்போது பிரச்சினை வந்ததோ? அப்போதே கட்டுரைக்குரிய நபர் சுதாரித்திருக்க வேண்டாமா? தொடர்ந்து அதே தவறை செய்தது அவரின் அறிவீனத்தையே காட்டுகிறது. என விமர்சனம் செய்தார் கடைய நல்லூர் பாரூக்.

இவரது கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. அதிக சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தாயகம் செல்கிறார். குறைந்த சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தான் ஊர் போகிறார். ஆக வெளிநாட்டிலிருந்து ஊர் செல்லும் எல்லோருமே பெட்டி, பெட்டியாய் சாமான்கள் வாங்கி செல்லும்போது பெண்களின் பார்வைக்கு அனைவரும் சமமாகவே தெரிகின்றனர். அதனால் தான் பக்கத்து வீட்டு ரேவதிக்கு அதிக சம்பளம் பெறும் அவள் புருஷன் பத்தாயிரம் ரூபாய்க்கு தங்க வேட்டை புடவை வாங்கி கொடுத்ததால் ரேவதிக்கு அவள் புருஷன் வாங்கி கொடுத்த அதே புடவையை எனக்கும் வாங்கி அனுப்புங்கள் என்று மிக குறைந்த சம்பளம் பெறும் தம் புருஷனுக்கு போன் மூலம் விண்ணப்பிக்கிறாள் ராக்காயி ஆக வெளிநாட்டு சாமான்கள் மீதான மோகம் ஒட்டுமொத்த பெண்களை யும் வாட்டி வதைப்பது எதார்த்தம். இதற்கு முழுபொறுப்பும் உழைப் பாளிகளாகிய நாம் தான் !

மாண்புமிகு மக்களவை உறுப்பினர் ஒருவர் டெல்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது கட்டுரையை மின்னஞ்சல் மூலம் படித்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நிலை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல பல பேரின் எதார்த்தமும் அதுவாகவே உள்ளது. அருமையான கருத்துக் களை காலம் அறிந்து சமூக அக்கறையுடன் கொடுத்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட நபரின் பிரச்சினைகள் தீர அவர் தாயகம் செல்வதுதான் சிறந்தது. அவர் வாழ்க்கை வளம்பெற எல்லோரும் பிரார்த்திப்போம் எனக் கூறியதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

பிரச்சினைக்குரிய நபர் உணர்ச்சி வயப்பட்டு கேன்சல் செய்து விடாமல் குழந்தையில்லா தமது சூழ்நிலையை அவரது கம்பெனி நிர்வாகத்திடம் எடுத்து சொல்லி ஐந்தரை மாதம் நீண்ட கால விடுமுறை வாங்கி ஊர் செல்வது தான் நல்லது என்றார் வேலூர் ராஜேஸ் கண்ணன்.
! அதனால் குழந்தையின்மையை தவிர்க்க உடனடியாக அவர் கேன்சலில் ஊர் செல்லட்டும். கடவுள் பாக்கியத்தால் அவரது எல்லா காரியங்களும் கை கூடிய பிறகும் அவர் துபாய் வர ஆசைப்பட்டால் நானே எனது நண்பரின் கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறிய தஞ்சை ஜவஹரின் மனிதநேய சிந்தனையை என்னவென்று சொல்வது?

பொதுவாக அமீரக வாழ்க்கை என்பது சிலருக்கு வேண்டுமானால் சோலைவனமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர்க்கு பாலைவனமாகவே இருக்கிறது. தற்போதைய பொருளாதார மாற்றத்தால் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. குடும்ப வசதிக்காக எடுத்த லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் ஒவ்வொருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது ‘0’ பூஜ்ஜியமே ! அதனால் பிரச்சினைக் குரிய நண்பர் தாயகம் செல்வதுதான் சரியானதாக இருக்கும். என்றார் முகவை தைய்யூப் அலி,

உங்கள் கட்டுரையை படித்ததும் ‘ஷாக்’ காகி விட்டேன். காரணம் நானும் தற்போது திருமணம் முடிந்து 55 வது நாளிலேயே துபாய் வந்து விட்டேன். நிச்சயம் உங்கள் கட்டுரை எனக் கொரு எச்சரிக்கை மணியாக இருக்கும் எனக் கருதுகிறேன். உங்கள் நண்பர் எதைப் பற்றியும் யோசிக்காமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கேன்சலில் ஊர் செல்வது தான் சிறந்தது எனக்கூறி நம்மை வியப்படைய வைத்தார் ஏர்வாடி சுல்தான்.

இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு பிரச்சனைகள். எனவே இதனை நாம் சந்தித்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு நம்மால் இயன்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களது வாழ்வு மேம்பட துணைபுரியலாமே !

இதில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் 050 795 99 60 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
துபாய் ..

நன்றி : லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin