ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள்
மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.
13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். இயேசுநாதரின் சீடரான புனித தாமஸை, அவர்கள் துறவியாக வணங்கினராம்.
போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.
மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...
அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.
அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்ுக கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.
உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.
இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆற்காடு நவாப் வம்சத்தினர் ஏராளமான கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் பெருமளவில் நிலங்களை, நிதியை தானமாக அளித்துள்ளதே நல்லிணக்கத்திற்கு நல்ல சான்றாகும்.
இவையெல்லாம் நமது நாட்டின் அருமையான மத நல்லிணக்கத்திற்கு சான்றுகள் ஆகும் என்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக