திங்கள், 24 ஆகஸ்ட், 2009

சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும்

சென்னை சென்ட்ரல்- திருச்செந்தூர் இடையே வாரம் இருநாள் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகளின் கூட்டநெரிசலை சமாளிக்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில், வாரம் இருநாள்கள் ஜூலை 27-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் சென்னையில் இருந்து ரயில் (எண் 0659) வாரத்தில் திங்கள், சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

அதுபோல திருச்செந்தூரில் இருந்து (ரயில் எண் 0660) வாரத்தில் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு 2.10 மணிக்கு வரும். அங்கிருந்து 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் போய் சேரும்.

இந்த சிறப்பு ரயில் செய்துங்கநல்லூர், நாசரேத், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சிறப்பு ரயிலை ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் நின்று செல்லும் ரயில்வேயின் முடிவு தாற்காலிகமாக கைவிடப்பட்டது.

தற்போது இடைத்தேர்தல் முடிந்ததையடுத்து சிறப்பு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து வரும் சிறப்பு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் காலை 5.34-க்கு வந்து 5.35 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயில் ஸ்ரீவைகுண்டத்துக்கு பிற்பகல் 1.15 மணிக்கு வந்து 1.16 மணிக்கு புறப்படும்.

சனிக்கிழமை (ஆக. 22) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் மறுஅறிவிப்பு வரை இதே நடைமுறை தொடரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வாரத்தில் வியாழக்கிழமை இயக்கப்படும் ரயில் காயல்ப்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin