வெள்ளி, 3 ஜூலை, 2009

வேலை நிலவரம்: மேற்கத்திய நாடுகளை விட இந்திய நிலை பரவாயில்லை


பொருளாதார சீர்குலைவு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை சற்று பரவாயில்லை, சிறப்பாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சீர்குலைவு காரணமாக வேலையிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் உள்ளது.

சாதாரண வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களால் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் குழப்பம், உலக அளவிலான பொருளாதார நெருக்கடியில் கொண்டு போய் விட்டு விட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக அளவில் ஏகப்பட்ட நிறுவனங்கள் சரமாரியாக தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

சிட்டிபாங்க் 50 ஆயிரம் பேரை நீக்கி விட்டது. பிரிட்டிஷ் டெலிகாம் 10 ஆயிரம் பேரை தூக்கி விட்டது. ஹெவ்லட் பேக்கார்ட் 24 ஆயிரம் பேரை நீக்கி விட்டது.

இந்தியாவிலும் கூட இந்த பாதிப்பு எட்டிப் பார்க்கத்தான் செய்தது. கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் 50 ஆயிரம் வேலையை இழந்துள்ளதாக ரெடில்டன் சர்ச் பார்ட்னர்ஸ் நிறுவனம் கூறுகிறது.

பொருளாதார சீர்குலைவால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட இரு துறைகள் - ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை. இந்த இரண்டிலும் 79 சதவீத அளவுக்கு வேலை குறைந்து போய் விட்டது.

அதேபோல ஏற்றுமதி மற்றும் வர்த்தகத் துறையிலும் 79 சதவீத அளவுக்கு வேலையிழப்பு இருந்தது. ஐடி மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைகளில் 50 சதவீத அளவுக்கு வேலையிழப்புகள் இருந்ன. வங்கிகள் மற்றும் நிதிப் பிரிவில் 22 சதவீத அளவுக்கு வேலையிழப்பு காணப்பட்டது.

இந்த எண் கணக்கை மட்டும் வைத்து இந்தியாவிலும் பொருளாதார சீர்குலைவு பேயாட்டம் போடுவதாக முடிவு கட்டி விட முடியாது.

காரணம், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வேலை இழப்பு என்பது பெரிய அளவில் இல்லையாம். பயந்து பீதியாகும் அளவுக்கு இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஹெவிட் அசோசியேட்ஸ் என்கிற வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் கூறுகையில், இந்தியாவில் உள்ள 16 சதவீத நிறுவனங்கள்தான் வேலைஇழப்பு குறித்து யோசிக்கின்றன.

60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆளெடுப்பில் ஈடுபடத்தான் செய்கின்றன. பத்தி்ல் 9 நிறுவனங்கள் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்காமல் வழங்கிக் கொண்டுதான் உள்ளன என்கிறது ஹெவிட்ஸ்.

வருகிற பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லப் போகும் அறிவிப்புகளை அனைத்துத் துறையினரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் மீண்டும் வேலை வாய்ப்புப் பிரிவுக்கு ஊக்கம் தரும் வகையில் அதில் ஏதாவது இருக்கலாம் என்ற நம்பிக்கையும் ஏகமாக உள்ளது.

நம்பிக்கைதானே வாழ்க்கை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin