வெள்ளி, 3 ஜூலை, 2009

இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்


ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

எதிர்காலத்தில் ரயில்வே எப்படி செயல்படவேண்டும், அதன் முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற தேவையான வருவாய் ஆதாரங்களை திரட்டுவது எப்படி என்பதில் மம்தாவுக்கு என்று தனி சிந்தனை உள்ளது. அது இந்த பட்ஜெட்டில் பிரதிபலிக்கும் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

தான் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் மக்கள் விரும்பும் பட்ஜெட்டாக இருக்கும் என்பதை மம்தா ஏற்கெனவே சுட்டிக்காட்டிவிட்டார். மனிதாபிமான முகம் கொண்டதாக அது அமையும் என்றும் கூறியுள்ளார். எனவே பயணிகள் கட்டணத்தில் மாற்றம் வரக்கூடும் என்று நம்பலாம்.

அதிவேக ரயில்களில் விதிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை அவர் ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்புக் கட்டணம் மீது பயணிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

காஷ்மீர் ரயில் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி முடிப்பது, சரக்கு ரயில்களுக்கு தனி ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகியவை அவரது முனைப்பு முயற்சிகளில் இடம்பெறக்கூடும்.

பயணிகளுக்கு சாதகமாக அமையும் விதத்தில் தட்கல் திட்டத்திலும் அவர் மாற்றம் அறிவிக்கக்கூடும்.

பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்காது: ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற ரயில்வேக்கு ரூ. 14 ஆயிரம் கோடி செலவாகும். இந்த கூடுதல் சுமையை தாங்கவேண்டிய நிலையில் பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு இடம்தரக்கூடாது என்பதில் ஆணித்தரமாக இருக்கிறார் மம்தா என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் சரக்குப் போக்குவரத்து தொழிலுக்கு உறுதுணையாக இருக்க சில சலுகைகளை அவர் அறிவித்தால் ஆச்சரியம் இருக்காது.

ரயில்வே திட்டங்களை அரசு-தனியார் துறை கூட்டுமுயற்சியில் செயல்படுத்திட அவர் தீவிரம் காட்டக்கூடும். இந்த விஷயத்தில் ஏற்கெனவே அவர் தனது நிலையை தெளிவுபடுத்திவிட்டார்.

ரயில்களில் உள்ள ஜன்னலோர நடுவரிசை பெர்த்துகளை நீக்குவது பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிடுவார். மேலும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத சில ரயில்களை கைவிடுவது பற்றிய முடிவையும் அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் போர்ட்டர்கள் (சுமைக்கூலிகள்) பற்றாக்குறை காணப்படுவதால் புதிதாக போர்ட்டர்களை நியமிப்பது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிடுவார்.

இப்போது பயணிகள் மத்தியில் பரவலாக உள்ள குறை, சரியான நேரத்தில் ரயில்கள் போய்ச் சேராததாகும். எனவே நேரத்தில் ரயில்கள் போய்ச் சேருவதற்கு அவர் முக்கியத்துவம் தருவார். மேலும் வெளியூர்களிலிருந்து வந்து கொண்டிருக்கும் ரயில்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக ரயில்களை செயற்கைக் கோள் தொடர்புடன் இணைப்பது பற்றிய அறிவிப்பையும் மம்தா வெளியிடக்கூடும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin