செவ்வாய், 23 ஜூன், 2009

இஸ்லாமிய வங்கி இரண்டாவது மண்டல மாநாடு மற்றும் கண்காட்சி


தனிநபர் பொருளாதாரத்தை வட்டியில்லா வங்கி உள்ளிட்ட அமைப்புகள் உயர்த்தப் பாடுபட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய "வட்டியில்லா வங்கியை நோக்கி' எனும் இரண்டாவது மண்டல மாநாடு மற்றும் கண்காட்சியை, திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்து, அவர் பேசியது:

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது நாணயம் ஆகும். சக்கரத்தைப் போன்று அதை உருண்டை வடிவில் அமைத்ததன் காரணம், நாணயம் உருண்டோடி எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். "நா நயம்' கெடும் போது தான் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் வட்டியின் கொடுமை குறித்து கண்கூடாக அறிய முடிகிறது. இதனாலேயே கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் வட்டியை குறைக்கக் கூடிய அதிகாரம் கூட நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வட்டியானது சமுதாயத்தில் சீரழிவினை ஏற்படுத்துகிறது. வட்டியில்லாமல் பணத்தைக் கடனாகக் கொடுக்க முடியுமா என்பதையும், அவ்வாறு கொடுத்தப் பணத்தை திரும்பப் பெற முடியுமா என்பதையும் ஆராய வேண்டும்.

தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்த இதுபோன்ற வட்டியில்லா வங்கிகள் உதவி செய்யவேண்டும் என்றார் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி.

இந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத் தலைவர் கே.எம். முகம்மது அலி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட ஹாஜி. மௌலானா அப்துல் ரஹீம் ரஷாதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் சமது, ஜே.ஏ.ஓ.ஹெச் அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசிம், இலங்கை அமானா இஸ்லாமிய வங்கி ஆலோசகர் முகமது மர்ஷீத், அகமது மஃபாஸ் யூசுபி, சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் பொருளாதாரத் துறைத் தலைவர் டி. அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாநாட்டில், ஒவ்வொரு முகல்லா பள்ளிவாசல் ஜமாத்திலும், பள்ளிக்குச் சொந்தமானப் பணத்தை வட்டியில்லாக் கடன் கொடுத்து இஸ்லாமிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். மத்திய அரசு இந்தியாவில் இஸ்லாம் வங்கியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ரகுராம் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin