திருச்செந்தூர்-சென்னை இடையேயான செந்தூர் விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாள்கள் இயக்க ஆய்வு செய்யப்படும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வாராந்திர ரயில் சேவையை ரயில்வே முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 8.2.2009-ல் தொடக்கி வைத்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், அதே விழா மேடையில் இந்த ரயில் வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
தற்போது வாராந்திர ரயில் (எண் 6735) சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேருகிறது. அதுபோல் திருச்செந்தூரில் இருந்து (எண் 6736) இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
இந்த ரயில்சேவை தொடக்கப்பட்ட பிறகு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவுகள் 10 நாள்களுக்கு முன்பே முடிந்து விடுகின்றன.
இதனால் வாரத்தில் 5 நாள்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ரயில்சேவையை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்தை கோரி வருகின்றனர்.
பயணிகள் அதிர்ச்சி
5 நாள் ரயில்சேவை தொடங்கும் நாளை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் வாரத்தில் 2 நாள்கள் இயக்க ஆய்வு செய்யப்படும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்டு வரும் திருச்செந்தூர் ரயில், மற்ற நாள்களில் பிலாஸ்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் திருச்செந்தூர், காயப்பட்டினம், நாசரேத், ஆறுமுகநேரி, ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் போதிய ரயில் வசதியின்றி நாகர்கோவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்களிலும் ஏனைய விரைவு ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேம் நடைபெற உள்ள நிலையில், வாரத்தில் 5 நாள் ரயில்சேவை தொடக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகத்தின் தற்போதைய அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக