ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திங்கள், 15 ஜூன், 2009
தூத்துக்குடியில் திமுக உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்: எம்.பி. அலுவலகம் தீவைப்பு
தூத்துக்குடியில் திமுக உட்கட்சி மோதல் உட்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரையின் அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
தூத்துக்குடியின் புதிய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.ஜெயதுரை தற்போது தூத்துக்குடி காமராஜ் சாலையின் தனது அலுவலகத்தை திறந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2.30 மணியளவில், 10பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்து எம்.பி. அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளது. இதனால் அலுவலகத்தில் தீபரவிய அதில் உள்ளிருந்தவர்கள் உயிருக்குப் பயந்து தப்பியோடினர்.
சமீப காலமாக திமுக வினரின் உட்கட்சி பிரச்சனைகளால் எம்.பி.யின் வரவேற்பு பேனர் கிழிப்பு, எம்.பி. ஆதரவாளரின் கார் கண்ணாடி உடைப்பு போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வரும் இவ்வேளையில் எம்பி அலுவலகம் மீது நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் உட்கட்சி பூசலின் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
தீவைப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த எஸ்.ஆர்.ஜெயதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தான் கட்சியின் தலைக்கும், முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் கட்டுப்பட்டவனே தவிர வேறு யாருக்கும் கட்டுபட்டவன் அல்ல. சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து வருகின்றன. என்னை அழிக்கும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரின் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பத்தினையடுத்து தூத்துக்குடி எஸ்.பி.பொறுப்பு (பொறுப்பு) அஸ்ராகர்க் நேரில் பார்வையிட்டார். காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல் துறையினர் யார்மீது நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்திலிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக