சனி, 20 ஜூன், 2009

6-ம் வகுப்பு முதல் கணினி கல்வி!


தமிழகத்தில் முதல்முறையாக 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி கல்வி, இந்தக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்மாதிரியான இந்தக் கல்வித் திட்டத்தை நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.


இந்நிலையில் இந்தக் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 6-ம் வகுப்புக்கு இந்தக் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் 2 வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கணினி கல்வி கற்பிக்கப்பட உள்ளது.


ஏற்கெனவே பள்ளி ஆசிரியர்களுக்கு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த என்ஜினீயர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி அளித்துள்ளனர். மாநிலத்தில் உள்ள 4,200 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இந்தக் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


"கணித ஆய்வகங்கள், ஆங்கில மொழித் திறன், கணினி கல்வி என 3 முக்கிய அம்சங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்' என்றனர் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்.


100 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது...: 2009-10 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 100 அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


9-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: மேலும், தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிந்திருக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தரம் உயர்த்தப்படும் பள்ளியில் தேவையான அளவு 9-ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனரா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளின் பட்டியல் விவரம் உள்பட பல்வேறு விவரங்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin