அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் இந்த அமைப்பு பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் 09.05.2009 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் அபுதாபி ஏர்லைன்ஸ் ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கு துவங்கியது.
ரோஸ்லான் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்தோடு அமைப்பின் பலதரப்பட்ட சமூகப் பணிகள் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக கருத்தரங்கின் மையக் கருத்தைக் குறித்து செய்யது அலீ அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அவர் பல புள்ளிவிவரங்களைக் கூறி அழகுற விளக்கினார்.
மொத்த வெளிநாடுவாழ் இந்தியர்களான சுமார் 2 கோடி பேர்களில் வளைகுடாவில் மட்டும் சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் வருட ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி வளைகுடாவிலிருந்து மட்டும் சுமார் 2,46,000 கோடி அந்நியச் செலாவணியாக இந்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது.
இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபியில் 5 சதவீதமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த என்.ஆர்.ஐ களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பது விந்தையாக உள்ளது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அடுத்ததாக அமைப்பைச் சேர்ந்த கேரளாவைச் சேர்ந்த ரஹீம் மாஸ்டர் உரையாற்றினார். இங்குள்ள என்.ஆர்.ஐகளின் மக்கள்தொகையை கணக்கில் கொண்டால் இவர்களால் 5 எம்பிக்களையும், 35 எம்.எல்.ஏக்களையும் தேர்ந்தெடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு புள்ளிவிவரங்களை குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட அய்மான் அமைப்பைச் சார்ந்த ஷாகுல் ஹமீது, இன்ஜாஸாத், நிறுவனத்தின் மேளாளர் ஜாபர் சாதிக் ஆகியோரும் பேசினர்.
அமீரக இந்தியா சகோதரத்துவ பேரவை நடத்தும் இந்த ஓட்டுரிமை போராட்டம் காலத்தின் தேவை என்றும், வெற்றி கிட்டும் வரை இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும், அதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் என்றும் உண்டு என்றும் அவர்கள் தங்கள் உரையில் குறிப்பிட்டனர்.
அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. கௌஸ் பாஷா, அஜ்மல், சுபைர் போன்றோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக அப்துல் கனி அவர்கள் முடிவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், பேரவை, இந்தப் போராட்டத்தை மூன்று கட்டங்களாக நடத்தவுள்ளது.
முதல் கட்டமாக அனைத்து வளைகுடா நாடுகளிலும் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.இரண்டாம் கட்டமாக, இந்தியா வில் புதிய அரசு அமைந்தவுடன், பெங்களூர் , கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
நமது கோரிக்கைகளை அரசு கேட்காவிட்டால் மூன்றாம் கட்டமாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழு உருவாக்கப்படும். இந்தக் குழு சட்ட ரீதியாக என்.ஆர்.ஐ களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும். இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராடும் என்றார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டோரிடம் கருத்து தெரிவிப்பதற்காக படிவங்கள் கொடுக்கப்பட்டு கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக