இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்னும் பகுதியில் பிரபாகரனும் சுமார் 300 விடுதலைப்புலிகளும் சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையால் சுற்றி வளைக்கப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
சிங்கள ராணுவத்தின் அதிரடிப்படையை சீர் குலைக்க கரும்புலிகள் அடுத்தடுத்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கரும்புலிகள், படை பிரிவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது ஏற்பட்ட இடைவெளியை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரது சகாக்களும் வெளியேற முயன்றனர். ஆம்புலன்ஸ் வேன் ஒன்றில் ஏறி பிரபாகரன் சென்றார்.
ஆனால் சிங்கள ராணுவத்தினர் அந்த பகுதியில் இருந்து யாரையும் தப்ப விடவில்லை. அப்பாவி தமிழர்கள் உள்பட அனைவரையும் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த அதிரடி தாக்குதலில் பிரபாகரனும் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
அவருடன் சூசை மற்றும் பொட்டுஅம்மானும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை ராணுவத்தை மேற்கொள் காட்டி ஹெட்லைன்ஸ் டூடே தொலைக்காட்சி இன்று மதியம் செய்தி ஒளிபரப்பியது.
மத்திய அரசின் யு.என்.ஐ. செய்தி நிறுவனமும் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை சிங்கள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நாணயகாரா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்தார்.
அவர் மேலும் கூறுகையில், பிரபாகரன் உடலை ஆம்புலன்ஸ் வேனில் இருந்து நாங்கள் கைப்பற்றி உள்ளோம். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை அதிபர் ராஜபக்சேதான் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அதற்காக நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி பிணமாக மீட்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடலை இலங்கை தொலைக்காட்சி இன்று மதியம் முதல் ஒளிபரப்பு செய்து வருகிறது.
தகவல் : மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக