இலங்கை இனப்படுகொலையை நடத்தி வரும் சிங்கள அரசையும், ராணுவத்தையும் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கக்கோரி நேற்று தூத்துக்குடியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
திட்டமிட்டு இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பேரணி நடைபெறும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.
இலங்கையில் கடந்த 5 மாத காலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகாயமடைந்து உயிருக்காகப் போராடி வருகின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். போர் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் தமிழ் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை இலங்கை ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதில் ஐ.நா.சபை நேரடியாகத் தலையிட்டு மக்களை காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். போரில் இறந்தவர்களின் குடும்பத்துக்கும், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்ட இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபட்ச, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் நேற்று பாலவிநாயகர் சாலையிலிருந்து மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்நேயன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், மதிமுக கட்சி நாசரேத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் மோகன்ராஜ், பா.ம.க. பிரான்சிஸ், பெரியார் திராவிட கழகம் பால் பிரபாகரன், ஆதிதமிழர் பேரவை மனோகரன் உள்ளிட்ட முக்கிய கட்சியினரும், அரசியல் சார்பற்ற அனைத்து தரப்பினர் மற்றும் பெண்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக