பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தென்மாவட்ட மாணவர்கள் சாதித்துக் காட்டி பெருநகர மாணவர்களை பெருமூச்சு விடச் செய்துள்ளனர்.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமையைப் பெற்றது பாளையங்கோட்டை. அந்தப் பெருமை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுவதும் பரவி மூலைமுடுக்கெல்லாம் மணம் வீசி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பெருநகர மாணவர்களே சாதனைப் பட்டியலில் பெருமளவில் இடம் பிடித்து வந்தனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள சில பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே முதலிடத்தைப் பிடிப்பார்கள் என்ற மனநிலை மக்களிடம் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வந்தது.
ஆனால், அண்மையில் வெளியான பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அந்த மாயக்கோட்டையை தகர்த்து தரைமட்டமாக்கி விட்டது.
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் நான்கு மாணவர்கள் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
நால்வரும் அக்மார்க் கிராமப்புற மாணவர்கள்.
அவர்களில் பா.ரமேஷ் (1183 மதிப்பெண்கள்), தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள பள்ளியில் படித்தவர்.
அதேபோல், விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் பள்ளியைச் சேர்ந்த ஜெசிமா சுலைகாள், தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த யாழினி சி.பிரதீப் ஆகியோர் 1181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தச் சாதனை எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் எதிரொலித்துள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில், கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரையைச் சேர்ந்த பி.எம். ஜோஸ் ரிஜின் 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஏழை மீன் வியாபாரியின் மகனான அவர், தனது அயராத முயற்சியினால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மகுடம் சூட்டியுள்ளார். பாளையங்கோட்டை பள்ளி மாணவி ஜே.ஹெப்சிபா பியூலா, இரண்டாம் இடத்தைப் பிடித்து அந்நகரின் ஆக்ஸ்போர்டு தகுதியை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இவர்களைப்போல், இந்தாண்டு பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் குக்கிராம மாணவர்களே சிகரத்தை வென்று சாதித்துக் காட்டியுள்ளனர்.
டியூசன், தனிப்பயிற்சி உள்ளிட்ட எவ்வித சிறப்பு வசதிகளும் இன்றி பள்ளி ஆசிரியர்களின் அறிவுரை, பயிற்சியை வைத்தே இந்த மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தங்களது குழந்தைகளின் படிப்புக்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்த பெற்றோர், தற்போது அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
நகரின் நச்சுக் கலாசாரத்துக்குள் சிக்காமல் கிராமப்புறங்களில் தனித்தன்மையுடன் வளரும் மாணவர்கள் வருங்காலத்திலும் வைரங்களாக ஜொலிப்பார்கள் என்று பொதுநல ஆர்வலர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆசிரியரின் அர்ப்பணிப்பும் இருந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் மாணவர்கள், சாதனைகளை நிகழ்த்தி காட்ட முடியும் என்றும் அவர்கள் ஆணித்தரமாக கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக