திங்கள், 20 ஏப்ரல், 2009

பிஎஸ்எல்வி ராக்கெட் பாய்ந்தது



ரேடார் இமேஜிங் செயற்கைக் கோள் ரிசாட்டை (risat-II) இஸ்ரோ இன்று காலை பிஎஸ்எல்வி- சி12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அண்ணா பல்கலையில் சிறிய செயற்கைக்கோளும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ பூமியின் மேற்பரப்பை எந்த வானிலையிலும் படம்பிடிப்பதற்கான ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தியது. \ ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் காலை 6.45 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய செயற்கைக்கோளான அனுசாட்டும் விண்ணில் செலுத்தப்பட்டது.திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து சென்று 2 செயற்கைக்கோள்களையும் அவற்றின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
ரிசார்ட் செயற்கைக்கோள் எந்த வானிலையிலும் துள்ளியமான புகைப்படங்களை எடுக்கக்கூடியது. இரவு மற்றும் பகல் ஆகிய நேரங்களிலும் இது படமெடுக்கும் திறன் கொண்டது. மேகமூட்டமான சூழ்நிலையிலும், நள்ளிரவிலும் கூட துள்ளியமான படங்களை எடுத்து அனுப்பும், இந்த செயற்கைக்கோள் படங்கள் பேரிடர் நிர்வாகத்திற்கு பெருமளவு உதவும். மேலும் இயற்கை வளங்களை கண்டறியவும் உதவும். பிஎஸ்எல்வி ராக்கெட் 15-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 14 முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதும் விஞ்ஞானிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சிறிய செயற்கைக் கோள் நாட்டிலேயே முதல் முறையாக பல்கலைக்கழகம் ஒன்றால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளாகும். கல்விப்பணி களுக்காக இது பயன்படுத்தப்படும். ரிசாட் செயற்கைக்கோள் 300 கிலோ எடை கொண்டது. அனுசார்ட் 40 கிலோ எடை கொண்டது.
மாதவன் நாயர் பேட்டி
செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பெருமிதத்தோடு கூறியதாவது:- ரிசார்ட் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி ராக்கெட் மிகவும் துள்ளியமாக அதன் நிர்ணயிக்கப் பட்ட பாதையில் சற்றும் விலகாமல் சென்று செயற்கைகோள்களை அவற்றின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளன. இது இஸ்ரோ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்த செயற்கைக்கோள் செலுத்தப் பட்டிருப்பது புத்தாண்டு பரிசாக அமைகிறது (சற்று தாமதமானாலும்). இது ஒரு ஆரம்பம்தான். இந்த ஆண்டு மேலும் பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஓஷன்சார்ட் ரிசோர்ட் சார்ட் மற்றும் ஒரு ரிசார்ட் மற்றும் கிரியோஜெனிக் தொழில் நுட்ப இணைப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இஸ்ரோவை பொறுத்தவரை இந்த ஆண்டு வாணவேடிக்கை நிறைந்த ஆண்டாக இருக்கும். ரிசார்ட், ரேடார் இமேஜிங் செயற்கை கோள் பலவிதமான பயன்பாடுகளை கொண்டது.
இதன் மூலம் பேரிடர் நிகழ்வுகளை மேம்பட்ட வகையில் நிர்வகிக்க முடியும். இது வரை 4 நாடுகளில் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் இருந்தது. இந்தியா இதுவரை கனடா செயற்கைக்கோளை இதற்காக சார்ந்திருந்தது. ஆனால் இனி நம்முடைய செயற்கை கோளே இந்த பணியை நிறைவேற்றும். இதில் மைக்ரோவேவ் இமேஜிங் தொழில்நுட்பம் இணைக்கப் பட்டுள்ளது. இது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும். பிஎஸ்எல்வி ராக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவதை நோக்கி மேலும் முன்னேறியுள்ளோம். இந்த சாதனை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை மனதார பாராட்டுகிறேன். பேட்டியின் போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.தத்தன், குரோஷி, தியாகி மற்றும் அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உளவு நோக்கம் இல்லை
ரிசார்ட் செயற்கை கோள் உளவு பார்க்கும் நோக்கத்தில் அனுப்பப்படவில்லை என்று மாதவன் நாயர் கூறினார். ரோடார் இமேஜிங் செயற்கை கோளான ரிசார்ட் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட இருப்பதாகவும், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காகவும் பயன்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டிய மாதவன் நாயர், இந்த செயற்கை கோளின் நோக்கம் உளவு பார்ப்பதல்ல என்று கூறினார். இந்தியாவில் உள்ள பூமியின் மேற்பகுதியை புகைப்படம் எடுத்து ஆய்வு பணிகளுக்கு உட்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

விஐடிபல்கலை ஆர்வம்
பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அண்ணா பல்கலை உருவாக்கிய சிறிய செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கு பாராட்டு தெரிவித்த மாதவன் நாயர், பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயல்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த செயற்கை கோள் ஒரு சோதனை முறையிலானது என்று கூறிய அவர், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் உள்பட 6-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இது போன்ற திட்டத்தில் பங்கேற்க விருப்பதாக கூறினார்.

சோதனைக்கு நடுவே இஸ்ரோ சாதனைசோதனைக்கு நடுவே இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் சாதனை நிகழ்த்தியிருப்பதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று திட்டமிட்டபடி செலுத்தப்பட்டாலும் நேற்று மாலை கவுண்டவுனின் போது எதிர்பாராத சோதனை ஏற்பட்டது.
ஏவுதளத்தில் ஏவு வாகனத்தை இணைக்கும் உம்ளிக்கல் கார்டு கீழே விழுந்து விட்டது. இதனால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தண்ணீர் கூட அருந்தாமல் தீவிரமாக செயல்பட்டு 6 மணி நேரத்தை ஈடு செய்தனர்.
இதன் காரணமாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் பறந்தது.

1 கருத்து:

LinkWithin

Blog Widget by LinkWithin