வியாழன், 26 மார்ச், 2009

பைலட் பாஸ்போர்ட் திட்டம்: தமிழகம் புறக்கணிப்பு


மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமல்படுத்தவுள்ள 3 நாளில் பாஸ்போர்ட் என்ற முன்னோடித் திட்டத்தில் தமிழகம் சேர்க்கப்படவில்லை.வருகிற ஜூன் மாதம் முதல் இந்த முன்னோடித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதில் தமிழகத்தின் பெயரை சேர்க்கவில்லை மத்திய அரசு.வேலை, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடுகளுக்குப் போவோருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்க வகை செய்கிறது இந்த பைலட் திட்டம்.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்தான் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகமாகும்.தமிழகத்தி்ல் முன்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவையிலும் ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது.அப்படியும் பாஸ்போர்ட் கோரி வருவோரின் எண்ணிக்கையை இந்த அலுவலகங்களால் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டது.இப்படி பல வழிகளில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டபோதிலும், புதிய பாஸ்போர்ட் கேட்டு மனு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது.தற்போது 30-லிருந்து 45 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. உடனடியாக தேவைப்படுவோருக்காக, தட்கல் முறையும் உள்ளது. இதில், 7 முதல் 15 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்டுகிறது.தற்போது அதையும் சுருக்கி 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புரட்சிகர திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தப் பணியை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்திடம், முன்னோடி திட்டத்தை மத்திய அரசு ஒப்படைத்து உள்ளது. திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, டி.சி.எஸ்.நிறுவனம், மத்திய வெளியுறவுத்துறையிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் பெற்று இந்த திட்டத்தை ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. 2010-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை முடிப்பதற்கு ஏற்ப டி.சி.எஸ்.நிறுவனம் பணிகளை மேற்கொண்டு உள்ளது.இந்த மாபெரும் திட்டம் முதல்கட்டமாக வடமாநிலங்களில் அம்பாலா, சண்டிகார், லூதியானா நகரங்களிலும், தெற்கு மங்களூர், ஹூப்ளி, பெங்களூர் ஆகிய தென் மாநில நகரங்களில் தொடங்கப்படுவதாகவும், இந்த திட்டத்தின் செயல்பாட்டைப்பொறுத்து அடுத்த 6 மாதங்களில் மேலும் 72 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று, டி.சி.எஸ்.நிறுவன துணை தலைவர் சக்ரபர்த்தி தெரிவித்தார்.மத்திய அரசின் இப்போதைய பாஸ்போர்ட் அலுவலகங்களுடன் இணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 2010-க்குள் நாடு முழுவதும் 79 பாஸ்போர்ட் மையங்களின் மூலம் டி.சி.எஸ்.நிறுவனம் பாஸ்போர்ட்களை வழங்க திட்டமிட்டு உள்ளது.டி.சி.எஸ்.நிறுவனம் வழங்கும் பாஸ்போர்ட் சேவா மையத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சாதாரண பாஸ்போர்ட் 3 நாட்களிலும், தட்கல் திட்டத்தில் ஒரே நாளிலும் பாஸ்போர்ட் வழங்கப்படும்.இப்படிப்பட்ட மிக முக்கிய திட்டத்தில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை. எந்தத் திட்டமானாலும் முதலில் தமிழகத்தில்தான் அமலாகிறது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவும், காங்கிரஸும் பெருமையுடன் கூறிக் கொள்வது வழக்கம்.அதேபோல மத்திய அரசும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் தமிழகத்தையும் இணைக்கத் தவறியதில்லை. ஆனால் மிகப் பெரிய 3 நாட்களில் பாஸ்போர்ட் என்ற முன்னோடித் திட்டத்தில் தமிழகத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது மத்திய அரசு.இது தமிழக மக்களுக்கு குறிப்பாக பாஸ்போர்ட் வேண்டி மாதக் கணக்கில் காத்துக் கிடக்கும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.திமுகவும், காங்கிரஸும் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று இந்த முன்னோடித் திட்டத்தில் தமிழகத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும் என பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளவர் விரும்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin